"ஷூட்டிங் செட்ல ஹர்பஜன் சிங் எப்பவுமே இதைத்தான் செய்வார்” - சீக்ரெட் சொன்ன லாஸ்லியா
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ் படத்திற்கு 'பிரெண்ட்ஷிப்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இதில் இணைந்து நடித்துள்ளார்
பிக்பாஸ் 3 இன் மூலம் பிரபலமான லாஸ்லியா, முதன்முதலில் தமிழில் நடிக்கும் திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். அந்த திரைப்படத்திற்கு 'பிரெண்ட்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. கடைசியாக ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார் ஹர்பஜன் சிங். அந்த அணியுடன் இணைந்திருக்கும் அக்ரிமெண்ட் காலம் முடிந்ததும் அவர் கொல்கத்தா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் இல்லாத நேரங்களில் திரைப்படங்களில் கவனம் செலுத்திவரும் இவர் சமீபத்தில் பிளாக் ஷீப் தொடரிலும் திருவள்ளுவராக நடித்திருந்தார்.
தியேட்டர்கள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், 'பிரெண்ட்ஷிப்' திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் பிரபல OTT தளத்தில் வெளியாகும் என்று முன்பு ஒரு செய்தி பரவியிருந்தாலும், இந்த படம் செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த திரைப்படத்தின் இயக்குநர்கள் ஆன ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர், 'சென்னையில் ஒரு நாள் பாகம் 2' படத்தை இயக்கியவர்கள். ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹர்பஜனின் நண்பராகவும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை சினிமாஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து சீண்டோவா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீஸரில் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் நண்பர்களாக இருப்பதாகவும், சில காரணங்களால் கைது செய்யப்படுவதாகவும் தெரியப்படுத்துகிறது. அவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள், எப்படி விடுவிக்கப்படுகிறார்கள் என்பது கதையாக இருக்கலாம். படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரத்தைப் பற்றிய அதிக செய்திகள் வெளிவராமல், மர்மமாகவே உள்ளது, லாஸ்லியா ஒரு மகிழ்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் ஸ்டார் ஆந்தம்' என்று ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்தியாவுக்காக பல போட்டிகள் விளையாடிய ஒரு முக்கிய வீரர் முழு நீள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.
ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்தது குறித்த அனுபவங்களை ஒரு தனியார் யூ ட்யூப் சேனலுக்கு லாஸ்லியா பகிர்ந்துகொண்டார். "ஸ்க்ரிப்ட் ஆங்கிலத்தில் இருக்கும், அதை தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வைத்திருப்பார்கள். பாஜிக்காக ஸ்க்ரிப்ட் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பாஜி நடிப்பதால், பாலிவுட்டிலும் திரைப்படம் நல்ல ரீச் இருக்கும் என்பதால் இந்தியிலும் சேர்த்து தயாராகிக்கொண்டிருக்கிறது. முதலில் பாஜியுடன் நடிக்கிறோம் என்னும்போது கொஞ்சம் பயமும், நிறைய மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால் அவர் மனிதராக மிகவும் நல்லவர், இரண்டு நாட்களில் எல்லோருடனும் பழகி ஷூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக்கிவிட்டார். செட்டில் எப்போதும் யாருடனாவது வீடியோ செய்துகொண்டு இருப்பார்" என்று நேர்காணலில் தெரிவித்தார்.
இது தவிர சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்திலும் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.