(Source: ECI/ABP News/ABP Majha)
Vijay Controversies : புதிய கீதை - லியோ வரை... சர்ச்சையை சந்தித்த விஜய் படங்கள்...ஒரு பார்வை
Vijay : இதுவரையில் சர்ச்சைகளை சந்தித்து பின்னர் வெளியான விஜய் படங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்...
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர் இளைய தளபதி விஜய் படங்கள் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டால் போதும், பிரச்சனைகளும் சர்ச்சைகளுக்கும் எங்கிருந்துதான் கிளம்பும் என தெரியாது. ஆனால் சொல்லி வைச்ச மாதிரி ஒவ்வொரு விஜய் படமும் பல போராட்டங்களுக்கு பிறகுதான் வெளியாகும். படத்தோட போஸ்டர், ஆடியோ லாஞ்ச், சிறப்பு காட்சி, படத்தின் வசனம், விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி. இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பெரிய ரகளையே நடைபெறும்.
அந்த வகையில் விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின... வாங்க பார்க்கலாம்:
புதிய கீதை :
2003-ஆம் வெளியான இந்த படத்தோட டைட்டிலே சர்ச்சையை கிளப்பியது. விஜய் கிறிஸ்தவர் அவர் படத்துக்கு எப்படி கீதை என பெயர் வைப்பீங்க என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவலன் :
விஜய் நடிப்பில் 2010ல் வெளியான 'சுறா' திரைப்படம் படு தோல்வியை சந்தித்ததால் அந்த நஷ்டத்தை சரி செய்தால் மட்டுமே காவலன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவோம் என திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் விஜய் அவர்களுக்கான நஷ்டத்திற்கு ஈடு கொடுத்ததால் காவலன் படம் வெளியிடப்பட்டது.
துப்பாக்கி :
2012-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டைட்டிலை மாற்றியமைக்க வேண்டும் என 'கள்ளத் துப்பாக்கி' பட குழுவினர் பிரச்சினை செய்தனர். மேலும் படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என சொல்லி தடை விதிக்க சில அமைப்புகள் போராட்டத்தை தொடங்கினர். அது சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்த பிறகுதான் போராட்டம் கைவிடப்பட்டது.
தலைவா :
விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய அந்த காலகட்டத்தில் போஸ்டரில் ‘டைம் டூ லீட்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் சார்ந்த சில பிரச்சனைகளால் படம் மற்ற மாநிலங்களில் வெளியானபோது 11 நாட்களுக்கு பிறகே தமிழகத்தில் வெளியானது.
கத்தி :
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இப்படத்தின் கதையை கோபி நயினாரிடம் இருந்து திருடிவிட்டதாக சர்ச்சையை கிளப்பினார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதை சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புலி :
2015-ஆம் ஆண்டு இப்படம் வெளியான நாளில் தயாரிப்பாளர்கள் வீட்டிலும் விஜய் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதனால் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பகல் காட்சியில்தான் படம் வெளியானது.
தெறி :
2016ம் ஆண்டு இப்படத்தை வெளியிடுவதில் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக படம் சில பகுதிகளில் வெளியாகவில்லை. இருந்தாலும் படக்குழு சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டது.
மெர்சல் :
2017-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் ஜி.எஸ்.டி குறித்து பேசிய சில வசனங்களுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. விலங்குகள் துன்பறுத்தப்பட்டதாக ஒரு சர்ச்சை ஒரு பக்கம் கிளம்ப படம் வெளியாவதற்கு 24 மணிநேரம் முன்பு வரை சென்சார் சான்றிதழை கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
சர்கார் :
வருண் ராஜேந்திரன் இப்படம் தன்னுடைய கதையின் தழுவல் என பிரச்சனை செய்ததால் அதற்கான கிரெடிட்ஸ் அவருக்கு வழங்கப்பட்ட பிறகுதான் படம் வெளியானது. அரசியல் ரீதியாக விஜய் பேசிய சில வசனங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிகில்:
போஸ்டரில் விஜய் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் கால் வைத்து இருந்ததற்கு வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
மாஸ்டர் :
இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருக்கும் போது விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த திருநெல்வேலியில் வைத்து விஜய்யை விசாரணை செய்ததோடு சென்னை வரை அவரை அழைத்து வந்தனர்.
பீஸ்ட்:
ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாக ஏற்பாடுகள் நடப்பட்டு வந்த நேரத்தில், யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். 2 திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதால் ஒரு நாள் முன்னதாகவே ஏப்ரல் 13-ஆம் தேதியன்றே பீஸ்ட் வெளியானது.
வாரிசு :
2023-ஆம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருந்த இப்படத்தை தெலுங்குக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் நேரடி படங்கள் மட்டுமே ஆந்திராவில் வெளியிடப்படும் என சர்ச்சையை ஏற்படுத்தி சிக்கலை ஏற்படுத்தினர்.
லியோ :
படத்தின் 'நான் ரெடிதான்' பாடல் மிக பெரிய ஹிட் அடித்தாலும் வரிகளை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர். லியோ படத்தின் ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பெரிய அளவில் பிரச்சனை வெடித்ததால் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அரசு அறிக்கை வெளியிட்டது.
இப்படி விஜய் திரைப்படங்களுக்கு சர்ச்சை ஏற்படுவது சகஜமான ஒன்றாகிவிட்டது.