Leo Update: சிங்கத்துடன் மோதுகிறாரா விஜய் ...லியோ படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் சிங்கம் ஒன்று படம் முழுவதும் பயணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் சிங்கம் ஒன்று படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்ற ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றிப்பெற்ற விக்ரம் படத்துக்குப் பிறகு இந்திய அளவில் கவனமீர்த்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இரண்டாம் முறையாக லோகேஷ் கூட்டணி வைத்துள்ள நிலையில், முன்னதாக லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் லியோ படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் சிங்கம் ஒன்று படம் முழுவதும் பயணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிராஃபிக்ஸ் மூலம் இந்த சிங்கம் உருவாக்கப்பட உள்ளதாகவும் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தை ஒத்திருக்கும் என்பதால் தான் இந்தப் படத்துக்கு லியோ என தலைப்பிடப்பட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் லோகேஷ் இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருந்து திரையரங்கில் ரசிகர்களை குஷிப்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் முன்கூட்டியே இந்தத் தகவல் கசிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் லியோ படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர் , பிரியா ஆனந்த் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியாளராக அன்பறிவும், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டரும் பணியாற்றுகிறார்கள்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் பற்றிய அப்டேட் கொடுத்து விஜய் ரசிகர்களை மகிழ்வித்தார்.
லியோ சிறப்பான ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்றும், 60 நாள்கள் ஷூட்டிங் நிறைவடைந்தது, இன்னும் 60 நாள்கள் ஷூட்டிங் உள்ளது என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாக படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லியோ திரைப்படம் லோகேஷின் ‘எல்சியு’ உலகத்தைச் சேர்ந்தது என்றும், விக்ரம் படத்தின் முந்தைய பாகமாக லியோ இருக்கக்கூடும் எனவும் இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.