Leo Special Show: 'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி - குஷியில் விஜய் ரசிகர்கள்
புதுச்சேரியில் லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் லியோ. வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அதே நாளில் வெளியாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் லியோ திரைப்படத்திற்கு காலை ஏழு மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி அளித்துள்ளது. இதனால் புதுச்சேரி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிறப்பு காட்சி
இந்நிலையில் லியோ ( Leo ) படத்துக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என கூறி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நேற்று (அக்டோபர் 16) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மதியம் விசாரணைக்கு வந்த போது இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அனுமதி கொடுக்கப்படும் பட்சத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் நாள் ஒன்றுக்கு 6 காட்சிகள் திரையிட நேரம் இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதோடு இன்று (அக்டோபர் 17) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு (Leo Special Show )
இந்நிலையில் லியோ படத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் பேசிய நீதிபதி அனிதா சுமந்த், “லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் முடிவை தமிழ்நாடு அரசிடம் விட்டு விடுவதாக கூறினார். அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணிக்குன் தான் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்பதால் அதனை மீற முடியாது. அக்டோபர் 19 மற்றும் 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கட்டும். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு முறையீட வேண்டும். இதற்கு நாளை (அக்டோபர் 18) மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.