Vijayakanth: திருவனந்தபுரம் சாலைகளில் சுற்றித் திரிந்த விஜயகாந்த்.. நகைக்கடை தொழில்.. நினைவுகூரும் கேரள மக்கள்!
Vijayakanth: பிரபல நடிகராக ஆவதற்கு முன் நடிகர் விஜயகாந்த் குறிப்பிட்ட காலத்தை கேரளாவில் திருவனந்தபுரத்தில் செலவிட்டுள்ளார்.
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்தின் (Vijayakanth) மறைவைத் தொடர்ந்து அவர் பற்றிய பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். மேலும் விஜயகாந்துடன் இணைந்து நடித்த நடிகர்கள் தங்களது அனுபவத்தை தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
விஜயகாந்தின் இளமைக் காலம் , சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர் எதிர்கொண்ட சவால்கள், நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக அவரது செயல்பாடுகள் என விஜயகாந்த் பற்றிய பல தகவல்கள் பகிரப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் உள்ள மக்களும் அவர் குறித்து நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள்.
திருவனந்தபுரத்தில் விஜயகாந்த்
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கும் விஜயகாந்துக்கும் ஒரு நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சாலா பகுதியில் உள்ள வீதிகளில் விஜயகாந்த் வலம் வந்ததாக அந்தப் பகுதி மக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
சிறு வயதில் இருந்தே திருவனந்தபுரத்தை பார்க்கும் ஆசையில் தனது சொந்த ஊரான மதுரையில் இருந்து ரயிலில் புறப்பட்டு வந்துள்ளார் விஜயகாந்த். விஜயகாந்தின் சிறு வயது நண்பரான சுந்தரராஜ் என்பவரின் சகோதரி முத்து லட்சுமி திருவனந்தபுரத்தில் சாலா பகுதியில் வசித்து வந்துள்ளார். முத்து லட்சுமியின் கணவர் கண்ணன் அந்த பகுதியில் கோல்டு கவரிங் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
முத்து லட்சுமி வீட்டில் அடிக்கடி சென்று தங்கியுள்ள விஜயகாந்த் அங்கு இருந்தபடி சினிமாவுக்கான வாய்ப்புகளைத் தேடி வந்துள்ளார். வாய்ப்புக்காக ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்த விஜயகாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகைக் கடையில் சென்று அமர்வது அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
இப்படியான நிலையில் கண்ணன் திடீரென்று உயிரிழந்துவிட அவருக்கு சொந்தமான ஜோதி ஜுவல்லரியை 7 லட்சம் கொடுத்து சொந்தமாக வாங்கியுள்ளார் விஜயகாந்த். சிறிது காலம் தொழில் செய்துவந்த விஜயகாந்த் தொழில் சரியாக இல்லாததால் ஜோதி ஜூவல்லரியை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி சென்றுள்ளார்.
ஒரு பிரபல நடிகரான பின் 2004ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சென்ற விஜயகாந்த் தன் இளமைக் காலத்தில் சுற்றித் திரிந்த சாலா பகுதியின் வீதிகளை வலம் வந்துள்ளார். தனது நண்பர்களுடன் சேர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயில், மியூசியம், பூங்கா என சுற்றி வந்ததாக தனது பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார். ஓணம் பண்டிகையின் போது கடையில் அமர்ந்தபடியே திருவிழாவை பார்த்து ரசித்ததாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
நேற்று முன் தினம் நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அக்கட்சிதொண்டர்கள் தொடர்ந்து அங்கு சென்று விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.