KPY Bala: "நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை" ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி தந்த KPY பாலா!
KPY Bala: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை எனும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார் நடிகர் பாலா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல திறமைகளை உள்ளடக்கிய பாலா தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். சின்னத்திரையில் கலக்கிய பாலா ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் முன்னேறியுள்ளார்.
மனிதாபிமானமுள்ள மனிதர்:
பாலா எந்த அளவுக்கு ஒரு நல்ல நடிகர் என்டர்டெயினராக இருக்கிறாரோ அதை விட பன்மடங்கு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் என்பதை அவரின் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் இருந்து ஏராளமான ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பல குழந்தைகளின் படிப்பிற்கு, முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்வதுடன் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர உதவிக்காக தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார்.
பல மலைவாழ் மக்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் தருணத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது 5வது ஆம்புலன்ஸை வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை எனும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் வழங்கியுள்ளார். நடிகர் பாலாவுக்கு அந்த ஊர் மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வசதி:
பாலா இப்படி செய்வதற்கு பின்னர் யாரோ இருக்கிறார்? என்ற குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளிக்கையில் இந்த மலை கிராமத்தில் மொத்தம் 172 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதை நான் கேள்விப்பட்டேன். கர்ப்பிணி பெண்களை கயிறு கட்டி தான் கீழே இறக்குவார்களாம். அதிலும் சில பெண்களுக்கு வழியிலேயே பிரசவமாகிவிடும் கொடுமைகளும் நிகழுமாம். இந்த கிராமத்துக்கு மேல ஏறி வருவதே மிகவும் சிரமமாக இருக்கிறது. அதனால் தான் இவர்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தேன்.
அதே மாதிரி எனக்கு பின்னாடி யாரு இருக்காங்க அப்படினு சோசியல் மீடியாவில் எல்லாம் கமெண்ட் போடுறாங்க. ஆமா எனக்கு பின்னாடி இருக்காங்க தான். அது தான் அவமானமும், கஷ்டமும். சில பேர் என்னை கமெண்ட்ஸ் மூலம் திட்ட கூட செய்றாங்க. எதிர்காலத்துல நீ பிச்சை தான் எடுக்க போற அப்படினு எல்லாம் சொல்றாங்க. அப்போ உனக்கு நான் பிச்சை கூட போமாட்டேன் அப்படினு எல்லாம் திட்டுறாங்க. அவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன். எதிர்காலத்துல நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. நான் பிச்சை எடுக்குற அதே சிக்னல்ல தான் நான் வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸும் வந்து நிக்கும்" என சரியான பதிலடி ஒன்றை செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார் நடிகர் பாலா.