கலா 40க்கு பதிலா கலா ஸ்வீட்டி வைத்திருக்கலாம்.. எனக்கு Dress எடுத்து கொடுத்தாங்க.. KPY பாலா எமோஷனல்
கலா 40 நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற KPY பாலா கலகலப்பாக பேசி எல்லோரையுநம் சிரிக்க வைத்தார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகளை தாண்டி தனக்கென்று தனித்த அடையாளத்தை பிடித்திருப்பவர் நடன இயக்குநர் கலா. ஒரு நடன கலைஞராகவும், பெண்ணாக 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சியுள்ளார். இதனை போற்றும் விதமாக நடந்த கலா 40 நிகழ்ச்சியில் பங்கேற்ற KPY பாலா அவர் செய்த உதவியை நினைவுகூர்ந்து பேசியது வைரலாகி வருகிறது.
கலா 40 நிகழ்ச்சி
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியை உலகளவில் தமிழ் ரசிகர்களை கவர காரணமாக இருந்திருக்கிறார் கலா மாஸ்டர். இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலம் அடைந்தவர் சாண்டியும் இவரது சிஷ்யன் தான். தற்போது இவர் ரஜினி, கமல், விஜய் படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி பாராட்டை பெற்றுள்ளார். 90களில் முன்னணி நடிகைகளாக இருந்த ரம்பா, மீனா, குஷ்பு போன்ற நடிகைகளுக்கு பிடித்த நடன கலைஞராகவும் இருந்துள்ளார். அதேபோன்று கலா மாஸ்டரால் உயர்ந்தவர்கள் பலரும் இருக்கின்றனர். அதை நினைவு கூறும் விதமாக கலா 40 என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தி பேசினார்கள்.
கலா 40க்கு பதிலா கலா ஸ்வீட்டி
இந்நிலையில், கலா 40 நிகழ்ச்சியில் பங்கேற்ற KPY பாலா தனது ஸ்டைலில் கலகலப்பாக பேசத் தொடங்கினார். அதில், முதலில் இந்த நிகழ்ச்சியில் என்னை அழைத்ததற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது கலா 40 நிகழ்ச்சி மாதிரி தெரியலை, ஏதோ காதுக்குத்து கிடா வெட்டு நிகழ்ச்சி மாதிரி சிறப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலா 40 வச்சதுக்கு பதிலா கலா ஸ்வீட்டி வைத்திருக்கலாம். அந்த அளவுக்கு ஸ்வீட்டானவங்க கலா அக்கா. அதே மாதிரி கலாவுக்கும் பலாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. எப்படி பலா வெளியே ரப்பா இருக்கும் உள்ளே ஸ்வீட்டா இருக்குமோ அதே மாதிரிதான் கலா அக்காவும் இருப்பாங்க என பாலா தெரிவித்தார்.
கலா மாஸ்டர் கணவருக்கு பொண்டாட்டியா
மேலும் பேசிய KPY பாலா, அவங்க பேச பேச இனிப்பா இருக்கும். இந்த மாதிரி அவங்களை பத்தி பேசிக்கிட்டே இருக்கலாம். பாமாயில் அப்பளம் சுடுறது அவ்ளோ கஷ்டம். கலா அக்க பச்சைத்தண்ணியிலும் அப்பளம் சுடுவாங்க. அவங்க கிட்ட முடியாதது என்ற பேச்சே கிடையாது. இந்த நேரத்தில் அவரோட கணவரை பத்தி சொல்லியே ஆகணும். கலா அக்காவை அந்த அளவிற்கு அன்போட பாத்துக்குறாரு. கலா அக்கா கணவரிடமே சொல்லியிருக்கேன். எனக்கு அடுத்த ஜென்மம் இருந்தா கலா அக்கா கணவருக்கு பொண்டாட்டியா பொறக்கனும். அந்த அளவிற்கு சூப்பரான மனுஷன் என ஜாலியாக கூறினார்.
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
கடந்த 2015ல் இதே செட்டில் ஒரு பக்கம் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, மற்றொரு பக்கம் மானாட மயிலாட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போ உள்ளே இருக்க செக்யூரிட்டி என்னை விடவில்லை. ஆனால், அதே பத்து வருடம் கழித்து இதே இடத்திற்கு நான் சிறப்பு விருந்தினராக வருகிறேன். எனக்கு பாதுகாப்பாக நான்கு செக்யூரிட்டி வருகிறார்கள் என பாலா எமோஷனலாக பேசினார். பின்பு கலா மாஸ்டர் குறித்து பேசிய பாலா, ஒரு நிகழ்ச்சிக்கு அக்கா வர சொன்னாங்க நான் போனேன். அவங்க என்கிட்ட தனிப்பட்ட முறையில் ரூ.3 லட்சத்தை கொடுத்து இது உன்னோட செலவுக்கு. இந்த காசுல நல்ல டிரஸ் எடுத்துக்கோ. வேற யாருக்கும் கொடுக்குறதா தெரிஞ்சா தொலைச்சுப்புடுவேன். ரம்பா மேடத்தின் கணவரும் எனக்கு உதவி செய்தாங்க மறக்க மாட்டேன் என KPY பாலா தெரிவித்தார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.





















