Kasthuri Raja on Selvaraghavan: பைத்தியமா தான் ஆகியிருப்பான்.. மகன் செல்வராகவன் குறித்து கஸ்தூரி ராஜா!
Kasthuri Raja: தன்னுடைய வித்தியாசமான படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்ட செல்வராகவன் சமீப காலமாக திரைப்படங்களை இயக்குவதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக தனித்துவமிக்க ஒரு இயக்குநராக விளங்குபவர் செல்வராகவன். தன்னுடைய வித்தியாசமான படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்ட செல்வராகவன் சமீப காலமாக திரைப்படங்களை இயக்குவதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.
இயக்குநராக அறிமுகம்:
செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா ஏராளமான படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர். விடலை பருவத்து பிள்ளைகள் விபரீதமான வழியில் செல்ல காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை மையமாக வைத்து உருவான கதை தான் 'துள்ளுவதோ இளமை'.
இப்படத்தை இயக்கிய கஸ்தூரி ராஜா பாதியிலேயே அதை தனது மகன் செல்வராகவனிடம் ஒப்படைக்க அதை ஒருவழியாக சிறப்பாகவே இயக்கி முடித்த செல்வராகவன், தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமானார். தன்னுடைய இளம் வயதிலேயே முதல் படத்தை இயக்கி இருந்தாலும் எந்த ஒரு பதட்டமும் இன்றி சிறப்பாக தன்னுடைய வேலையை செய்து முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து படத்தை வெளிக்காட்ட செய்தது.
தொடர் வெற்றி :
அடுத்ததாக இயக்குநர் செல்வராகவனையும், நடிகர் தனுஷையும் பளிச் என அடையாளப்படுத்திய படம் தான் 'காதல் கொண்டேன்'. மிகச் சிறந்த இயக்கமும் நடிப்பும் படத்தை தூக்கி நிறுத்தியதோடு இன்று வரை கொண்டாடப்பட்டும் வருகிறது. அடுத்தடுத்து செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என வித்தியாசமான பாணியில் படம் எடுப்பதை தன்னுடைய ஸ்பெஷலிட்டியாகவே முத்திரை பதித்தார்.
கசப்பான திருமண வாழ்க்கை :
செல்வராகவனின் படம் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கம் செல்லும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். அது தான் அவரின் தனி சிறப்பு. இப்படி பிஸியாக இருந்த காலகட்டத்தில் தான் செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வாலுக்கும் 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
மறுமணம்:
மிகுந்த மன வருத்தத்தில் இருந்த செல்வராகவன் தன்னுடைய உதவி இயக்குநரான கீதாஞ்சலி என்பவரை 2011ம் ஆண்டு காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களின் வாழ்க்கையை தற்போது மிகவும் அன்போடும் காதலோடும் அழகாகப் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
நடிப்பில் கவனம் :
பீஸ்ட் படம் மூலம் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய செல்வராகவன் தொடர்ச்சியாக சாணி காயிதம், பகாசுரன், நானே வருவேன், பர்ஹானா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' திரைப்படம் வெளியானது. அவர் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள். 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
கஸ்தூரி ராஜா உருக்கம் :
இந்நிலையில், மகன் செல்வராகவன் குறித்து கஸ்தூரி ராஜா பேசியுள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதில் “செல்வராகவனை அப்படியே விட்டு இருந்தா அவன் பைத்தியமாகி இருப்பான். கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்ட பிறகு தான் அவன் மாறினான். சிறு வயது முதலே எதைப் பார்த்தாலும் இது ஏன் இப்படி இருக்கு, அது ஏன் அப்படி இருக்கு எனக் கேள்வி கேட்டு கொண்டே இருப்பான். அவன் ஒரு மிக சிறந்த படைப்பாளி" எனப் பேசியுள்ளார். செல்வராகவன் பற்றிய அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் அக்கறையான இந்தப் பேச்சு வைரலாகி வருகிறது.