Jigarthanda Double X: 73 வயதில் முதல் படம்: ராகவா லாரண்ஸ் கொடுத்த நம்பிக்கை - ஜிகர்தண்டா நடிகர் ரத்தினம்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நடிகர் ரத்தினம் 73 வயதில் தான் நடித்துள்ள முதல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் மஹான் ஆகிய இரு படங்களுன் ஓடிடியில் வெளியாகிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிகர்தண்டா திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாகியது. அதே போல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தோஷ் நாராயாணன் இசையில் வெளியாகிய படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களைக் கவர்ந்த காட்சிகள்
ஜிகர்தண்டா படத்தில் பல்வேறு காட்சிகள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளன. இடைவேளைக் காட்சி, க்ளைமேக்ஸ் காட்சிகள் பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டி பேசியுள்ளார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் படத்தில் நடித்த துணைக் கதாபாத்திரங்களும் கவனம் பெற்றுள்ளது இந்தப் படத்தின் வெற்றியைக் காட்டுகிறது. நடிகர் இளவரசுவின் மை பாய் என்கிற வசனம் ஒருபக்கம் வைரல் ஆகியிருக்கிறது என்றால் அதே நேரத்தில் இந்தப் படத்தில் நடிகர் ரத்தினம் அவர்களின் நடிப்பும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
நடிகர் ரத்தினம்
தன்னுடைய 73 ஆவது வயதை எட்டியுள்ள நடிகர் ரத்தினம் சென்னையில் ஜிம் ட்ரெயினராக இருந்து வருகிறார். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடிப்பதற்காக தன்னை ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் சார்பாக அழைத்திருந்ததாகவும் முதலில் தயங்கி பின் நடிக்க சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனக்கு சினிமா மீது பெரியளவிற்கான அபிப்பிராயம் இல்லாமல் இருந்ததாகவும் ஆனால் இந்தப் படத்திற்காக அனைவரது உழைப்பையும் பார்த்து தனக்கு சினிமா மீது மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் ஒரு காட்சியில் ராகவா லாரண்ஸை தான் டேய் என்று அழைக்க வேண்டியதாக இருந்ததால் தான் லாரண்ஸிடம் சென்று மன்னிப்புக் கேட்டதாகவும் அதற்கு ராகவா லாரண்ஸ் “நீங்க எனக்கு தந்தை மாதிரி நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்” என்று தனக்கு தைரியம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பின் போது நடிகர் ராகவா லாரண்ஸ் தன் காலில் விழ வந்ததாகவும் அந்த தருணம் தான் கண்கலங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சிறிய வயதில் இருந்தே தான் பல கஷ்டங்களை சந்தித்து வந்ததாகவும் தன்னுடைய இத்தனை வருட உழைப்பிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் தனக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கார்த்திக் சுப்பராஜ் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.