Surya Birthday: ஜெயிச்சுட்டோம் மாறா.... நட்சத்திர பிம்பத்திற்குள் அடைபடாத நடிகன்....கங்குவா நாயகன் சூர்யாவின் பிறந்தநாள்..!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இன்று சூர்யா தனது 48ஆவது வயதை எட்டுகிறார். ஒரே நேரத்தில் கமர்ஷியல் வெற்றிகளை கொடுக்கும் நடிகராகவும் அதே சமயத்தில் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்யும் நடிகராகவும் சூர்யா கோலிவுட்டில் உலா வருகிறார்.
நட்சத்திர பிம்பத்திற்குள் அடைபடாத நடிகர்
தியாகராஜா பாகவதர் – பி யூ சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என தமிழ் சினிமாவில் எல்லா காலமும் நடிகர்களிடையே இருமை கட்டமைக்கப்பட்டு வந்துகொண்டே தான் இருக்கிறது. சூர்யாவையும் இந்த வரிசையில் பல நேரங்களில் இணைக்கவே முயற்சிக்கிறது தமிழ் சினிமா கலாச்சாரம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த வரையரைகளுக்குள் அடைபடாமலே இருந்து வருகிறார் சூர்யா.
இதற்கு முக்கியமான காரணம் தனது நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்தவதற்காகவோ அதைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவோ அல்லாமல், தனது நடிப்பாற்றல் வெளிப்படும் வகையிலான கதைகளை அவர் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதே என்று சொல்லலாம்.
பிதாமகன்
இதற்கு சிறந்த உதாரணமாக பிதாமகன் படத்தைச் சொல்லலாம். முன்னதாக தொடர்ச்சியாக காதல் கதைகளில் நடித்து வந்த சூர்யாவின் திரைவாழ்க்கையில் முக்கியமாக அமைந்த இரு படங்கள் என்றால் ஒன்று ’மெளனம் பேசியதே’ மற்றொன்று ‘காக்க காக்க’. அதுவும் காக்க காக்க திரைப்படம் சூர்யாவை ஒரு மாஸான ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியது. இதே மாதிரியான அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்திருந்தால் அவை மூன்றுமே நிச்சயம் வெற்றிப் பெற்றிருக்கும்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒன்றை சூர்யா தேர்வு செய்தார். சூர்யா அடுத்ததாக நடிக்க தேர்வு செய்த கதை ‘பிதாமகன்’. இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தபோது அவருக்கு படத்தின் கதைகூட தெரியாதென்றும் பாலாவின் மேல் இருந்த நம்பிக்கை ஒன்றுக்காகவே இந்தப் படத்தில் தான் நடிக்க ஒத்துக்கொண்டதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் சூர்யா.
பேரழகன்
பிதாமகன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த மற்றொரு படம் ‘பேரழகன்’. இது அவரது ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி. பேரழகன் படத்தில் மிரட்டலான ஆக்ஷன் நாயகனாக ஒரு கதாபாத்திரத்திலும், சின்னா என்ற மாற்றுத்திறனாளியாக மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருப்பார். மிக வித்தியாசமான திரைக்கதையான பேரழகன் படத்தில் சூர்யா - ஜோதிகா இருவரது நடிப்பும் ரசிகர்களை மிரளவைத்தது.
கமர்ஷியல் வெற்றிகள்
என்னதான் மாறுபட்ட கதைகளையும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும் சினிமாவில் வசூல் ரீதியிலான வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார் சூர்யா. கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், 24 ஆகியவை மிகப்பெரிய வெற்றிப்படங்கள். கமர்ஷியலாக வெற்றிபெற்ற இந்தப் படங்களில்கூட சூர்யாவை அடையாளம் காட்டும் தனித்துவமான ஏதோ ஒரு அம்சத்தை இந்தப் படங்களிலும் நம்மால் சொல்லிவிட முடியும்.
ஜெயிச்சுட்டோம் மாறா
இடைப்பட்ட காலங்களில் சில தோல்விப் படங்கள் சூர்யாவுக்கு இருக்கின்றன. ஆனால் இந்தத் தோல்விகளுக்காக யாரும் அவரது திறமை மீதோ, தேர்வுகளின் மீதோ குறை சொல்லவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுக்கு பெரிய பிரேக் கொடுத்தப் படம் என்றால் அது சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படம். தற்போது ‘கங்குவா’ மற்றும் ‘வாடிவாசல்’ என இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.
ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக சமூகக் கருத்துக்களை உள்ளடக்கியப் படங்களை தொடர்ந்து தயாரித்தும் வருகிறார் சூர்யா. சமூக அரசியல் வெளிகளில் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்து சூர்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!