Vasool Raja MBBS: 'சகலகலா டாக்டர்’ கமல்.. ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ ரிலீசாகி இன்றோடு 19 ஆண்டுகளாச்சு..!
கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்தி படத்தின் ரீமேக்
இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படம் தமிழில் ரீமேக் செய்யும் வாய்ப்பு இயக்குநர் சரணுக்கு கிடைத்தது. அவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இந்த படத்தில் சினேகா, நாகேஷ், பிரகாஷ்ராஜ், பிரபு, கருணாஸ், மாளவிகா, ஜெயசூர்யா என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
உள்ளூர் தாதாவாக இருக்கும் கமல், தந்தை நாகேஷின் ஆசைக்கிணங்க டாக்டராக இருப்பதாக பொய் சொல்லி நடிக்கிறார். இதற்கிடையில் பால்ய நண்பரான டாக்டர் பிரகாஷ்ராஜை சந்திக்கும் நாகேஷ், அவரின் மகள் டாக்டர் சினேகாவை, தனது மகன் டாக்டராக இருக்கும் கமலுக்கு திருமணம் செய்து வைக்க கேட்கிறார். ஆனால் கமல் ஒரு டாக்டர் இல்லை என்ற உண்மையை பிரகாஷ்ராஜ் போட்டுடைக்கிறார். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு மருத்துவர் ஆவது தான் என படிக்க செல்லும் கமலின் எண்ணம் நிறைவேறியதா என்பதே இப்படத்தின் கதையாகும்.
பரத்வாஜ் இசையில் கலக்கப்போவது யாரு, பத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு, காடு திறந்து கிடக்கின்றது, சீனாதானா பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
கமல் - கிரேஸி மோகன் கூட்டணி
பொதுவாக தமிழ் சினிமாவில் கமல் - கிரேஸி மோகன் கூட்டணியில் வெளியான படங்கள் காமெடியில் சக்கைப்போடு போடும். அப்படியான வரிசையில் வசூல் ராஜாவும் அமைந்தது. மருத்துவத்துறையில் இருக்கும் அவலங்களை இப்படம் தோலூரித்து காட்டியது. டைமிங் காமெடியில் ஒவ்வொருவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினர்.
ஆள்மாற்றம் செய்து மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவது. கட்டிப்பிடி வைத்தியம், கேரம் போர்டு, சொந்தமான உடல் கொண்டு வந்து மருத்துவ ஆராய்ச்சி செய்வது, வசூல் ராஜாவாக மிரட்டுவது, சிநேகாவுடன் காதல், பிரகாஷ்ராஜூடன் மோதல் என படம் முழுவதும் கமல் மிரட்டியிருப்பார். இவருக்கு இணையாக பிரகாஷ்ராஜ் நடிப்பில் அசத்தியிருப்பார். நிஜ வாழ்க்கையில் அப்படியான வேடத்தில் நடிப்பது கடினம் என படம் பார்த்த அத்தனைப் பேரும் நினைத்திருப்பார்கள்.
இந்த படத்திற்கு ஆரம்பத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்று பெயரிடப்பட்டது . பின்னர் வசூல் ராஜாவாக மாற்றப்பட்டது. இந்த படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்தபோது சரண் அஜித்தை வைத்து ‘அட்டகாசம்’ படத்தை இயக்கி கொண்டிருந்தார். அவரின் அனுமதியோடு முதல் வசூல் ராஜா படத்தை சரண் இயக்கி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.