Indian 2: "70 நாள் மேக் அப் போட்டு கமல் பட்ட கஷ்டம்" பிரம்மித்துப் போன இயக்குநர் ஷங்கர்!
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு முதலில் வருவதும் கமல் தான் படப்பிடிப்பு முடிந்து கடைசியாக வீட்டிற்கு செல்வதும் கமல்தான் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த் , பிரியா பவானி சங்கர் , காஜல் அகர்வால் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே.சூர்யா , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர்கள் விவேக் , மனோபாலா , மாரிமுத்து உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தியன் 2 படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்திய 2 பற்றி ஷங்கர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் “ பொதுவாக என்னுடைய படங்கள் எல்லாமே இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கான்செப்ட் . இந்தியன் 2 அப்படிதான். இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தியன் முதல் பாகம் தமிழ் நாட்டிற்குள் நடக்கும் கதையாக இருக்கும். இந்தியன் 2 தமிழ்நாடு கடந்து மற்ற மாநிலங்களுக்கு கதை விரிகிறது.
இந்தப் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள அத்தனை குடும்பங்களும் என்கேஜிங்காக பார்க்கக் கூடிய ஒரு படம் . படம் முடிந்த பிறகு நிச்சயமாக யோசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.” என்று ஷங்கர் பேசினார்.
கமலை பார்த்து சிலிர்த்துவிட்டேன்
தொடர்ந்து பேசிய ஷங்கர் “ இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் கமல் சார் தான் . முதல் பாகத்தில் மொத்தம் 40 நாள் தான் கமல் சாருக்கு மேக் அப் போட்டோம். இந்தப் படத்தில் மொத்தம் 70 நாள் மேக் போட்டோம் . தினமும் 3 மணி நேரம் அவருக்கு மேக் அப் போட நேரமாகும். அந்த மேக் அப் போட்டுக் கொண்டு சாப்பிட முடியாது ஸ்ட்ரா வைத்து தான் தண்ணீர் குடிக்க முடியும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிற்கு முதலில் வருவபவர் கமல்தான் . ஷூட் முடிந்து நாங்கள் எல்லாம் கிளம்பி கடைசியில் கிளம்புவதும் அவர்தான்.
ஏனென்றால் அந்த மேக் அப் எடுக்க அவ்வளவு நேரமாகும். முதல் நாள் இந்தியன் தாத்தா கெட் அப்பில் கமல் வந்து நின்றபோது எனக்கு சிலிர்த்துவிட்டது. ஷூட்டில் கமல் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது அது கமல் என்றே தோன்றாது. சேனாதிபதி என்றுதான் தோன்றும் அதுமட்டுமில்லாமல் கமலின் உழைப்பு பற்றியும் டெடிகேஷன் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த படத்தில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நீங்கள் கமல் சாரின் நடிப்பை இன்னும் தெளிவாக பார்க்கலாம்.” என்று ஷங்கர் தெரிவித்தார்