Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Vijay BJP TN Election: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் நடிகர் ரஜினிகாந்த் குறித்த பேச்சுக்கு ஒரு வாரம் கழித்து, அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் வரிசை கட்டிக் கொண்டு வந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Vijay BJP TN Election: நடிகர் ரஜின்காந்த் குறித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு, இப்போது கண்டனம் தெரிவிப்பது ஏன்? என்ற கேள்வி இணையத்தில் தீவிரமடைந்துள்ளது.
ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு:
கடந்த 12ம் தேதி தவெக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ எம்ஜிஆருக்கு பின் நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்த்க்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்து கொண்டது. கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்க போய்விட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று பேசியிருந்தார். இந்த கருத்துகள் ரஜினி ரசிகர்கள் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
திடீரென ஆக்டிவ் மோடுக்கு வந்த என்டிஏ கூட்டணி..
ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தாலும், ரஜினி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அரசியல் வட்டாரங்கள் தரப்பில் இருந்து யாரும் கருத்து சொல்லாமலேயே இருந்தனர். இந்நிலையில், நான்கு நாட்கள் கழித்து நேற்று இரவு திடீரென என்டிஏ கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஒரே நேரத்தில், ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை என பலரும் அடங்குவர். ஆதவின் பேச்சுக்கு ரஜினி தரப்பிலிருந்தே எந்தவித அதிருப்தியும் தெரிவிக்காத நிலையில், சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு திடீரென என்டிஏ கூட்டணி எதிர்ப்பை பதிவு செய்வது ஏன்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதற்கு, அரசியல் கூட்டணி கணக்குகளே காரணம் என்று கூறப்படுகிறது.

விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக
தவெக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக விருப்பம் காட்டாவிட்டாலும், விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் டெல்லி தலைமை மிகவும் தீவிரம் காட்டியது. இதற்காக 80 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவியை கொடுக்கவும் முன்வந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இதனால் தான், ரஜினி தொடர்பான ஆதவின் பேச்சையும் என்டிஏ கூட்டணி கண்டுகொள்ளாமல் இருந்ததாம். ஆனால், தமிழ்நாட்டில் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பாஜக உடனான கூட்டணியை விஜய் நிராகரித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த பாஜக தலைமை, இதுநாள் வரை நிறுத்தி வைத்திருந்த விஜய்க்கு எதிரான பரப்புரைகளை மீண்டும் முழு வீச்சில் தொடங்க உத்தரவிட்டுள்ளதாம். அதில் முதல் பணியாகவே, ஆதர் அர்ஜுனாவின் ரஜினிக்கு எதிரான பேச்சை தமிழ்நாடு பாஜக கையிலெடுத்துள்ளது. இதன் மூலம், ரஜினி ரசிகர்களின் ஆதரவு மற்றும் அனுதாபத்தை ஈட்ட முடியும் என்று நம்புகிறதாம்.
ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் அதிமுக?
டெல்லி பாஜகவிற்கு கட்டுப்பட்டு, அதிமுக தரப்பும் ரஜினி தொடர்பான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்துள்ளது. தற்போது அந்த கட்டுப்பாட்டை தகர்த்தியதுமே, நயினார் நாகேந்திரனை தொடர்ந்து இரண்டாவது நபராக ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி தான். பாஜக உடன் கூட்டணி இல்லாத நிலையில், தவெக உடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி மிகுந்த விருப்பம் காட்டினார். ஆனால், பாஜக கூட்டணிக்குள் வந்த பிறகு, அவர்களுக்கு சுமார் 30 தொகுதிகளை கொடுத்து, விஜய்க்கும் 80 தொகுதிகள் வரை ஒதுக்கினால், அதிமுகவிற்கு அது பேரிழப்பாக இருக்கும் என கருதியுள்ளார். அதன் காரணமாகவே, விஜய் கூட்டணிக்குள் வந்தாலும் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையே காரணமாக கூறி, டெல்லி அழுத்தங்களையும் மீறி, பாஜக கூட்டணிக்கு விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான எதிர்வினையாக, ரஜினி விவகாரத்தில் பாஜக - அதிமுக தலைவர்கள் தவெகவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த லேட் ரியாக்ஷன் அவர்களுக்கு பலனளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















