Kalaingar 100: திரையுலகம் எடுத்த கலைஞர் 100 விழா, நூற்றாண்டு நிலைத்திருக்கும்.. உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Kalaingar 100: ரூ.500 கோடி மதிப்பில் அரசு சார்பில் புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் 100 விழாவில் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்காற்றியவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ (Kalaingar 100) விழா நேற்று (ஜன.06) கொண்டாடப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த விழா இரவு 11 மணிவரை நீண்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் விஜய், அஜித் இந்த விழாவில் கலந்துகொள்ளாதது பேசுபொருளானது. 22 ஆயிரம் பேர் அமரக்கூடிய ஏற்பாடுகளுடன் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் சூர்யா, தனுஷ், கமல், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ் சினிமாவுக்கு ஆற்றிய பங்கு பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியை நினைவுகூறும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழா நிகழ்வுகள் வரும் பொங்கல் பண்டிகைக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கலைஞர் 100 விழாவினை ஒருங்கிணைத்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தமது தீப்பொறி வசனங்களால் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை, திரையுலகின் அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், 'கலைஞர் - #கலைஞர்100' என்னும் மாபெரும் கலை விழாவாக நடத்திய நிகழ்வில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பங்கேற்றோம்.
இந்த சிறப்புக்குரிய விழாவில், ரூ.500 கோடி மதிப்பில் அரசு சார்பில் புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்ற நம் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு போற்றுதலுக்குரியது.
அரசியல் - கலையுலகம் இரண்டிலும் கலைஞர் அவர்கள் படைத்த சாதனைகளை வரலாற்றுச் சம்பவங்களோடு ரஜினி சார், கமல் சார் என திரையுலக முன்னணியினர் நினைவுகூர்ந்ததும் - பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுமென திரையுலகம் எடுத்த கலைஞர் நூற்றாண்டு கலை விழா இன்னும் பல நூறாண்டுகள் நிலைத்திருக்கும்.
‘கலைஞர்-#கலைஞர்100’ ஐ ஒருங்கிணைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும், நிகழ்வில் பங்கேற்ற கலையுலகினர் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமது தீப்பொறி வசனங்களால் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டை, திரையுலகின் அனைத்து சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், 'கலைஞர் - #கலைஞர்100' என்னும் மாபெரும் கலை விழாவாக நடத்திய நிகழ்வில் மாண்புமிகு… pic.twitter.com/izdoJ8Pwnh
— Udhay (@Udhaystalin) January 6, 2024
முதலில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறவிருந்த கலைஞர் 100 விழா மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஜனவரி 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த இந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், கலைஞர் 100 விழாவுக்கு விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் வருகை தராததால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.