விஜய் இவர்களை சமாளித்தால் அரசியலில் ஜெயிக்கலாம்..ஜனநாயகன் இயக்குநர் எச் வினோத் ஓப்பன்
அரசியலில் இந்த நான்கு விதமான நபர்களை விஜய் சமாளித்துவிட்டார் எனில் நிச்சயம் அவர் ஜெயித்துவிடலம் என ஜனநாயகன் படத்தின் இயக்குநர் எச் வினோத் தெரிவித்துள்ளார்

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து முழு நேர அரசியலில் களமிறங்க இருக்கிறார் விஜய். விஜயின் அரசியல் வருகை குறித்து ஜனநாயகன் பட இயக்குநர் எச் வினோத் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு தி கோட் திரைப்படத்தில் நடித்துகொண்டிருந்த போதே விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என கட்சி அறிவித்தது மட்டுமில்லாமல் சினிமாவில் ஓய்வு பெற இருப்பதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஒருபக்கம் கட்சிப் பணிகள் இன்னொரு பக்கம் நடிப்பு என செயல்பட்டு வந்த விஜய் இன்னும் சில நாட்களில் சினிமாவில் இருந்து முழுக்க விலகி முழு நேர அரசியலில் களமிறங்க இருக்கிறார். விஜயின் 69 ஆவது மற்றும் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது
ஜனநாயகன் பட அனுபவம் பகிர்ந்த எச் வினோத்
ஜனநாயகன் படத்தைச் சுற்றி பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. இதுகுறித்து படத்தின் இயக்குநர் எச் வினோத் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜனநாயகன் ரீமேக் படமா என்கிற கேள்விக்கு ' அதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை. நான் உங்களிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான் . படத்தின் டிரைலரை பார்த்ததும் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். அதே நேரம் படத்தின் முதல் காட்சி முடியும் வரை காத்திருங்கள். இது எந்த மாதிரியான ஒரு படம் என்று தெரியும் ." என்று எச் வினோத் கூறியுள்ளார்
விஜய் அரசியல் குறித்து எச் வினோத்
விஜயின் அரசியல் வருகை குறித்து பேசிய எச் வினோத் " விஜய் அரசியலுக்கு வருவார் என்று எனக்கு முன்பே தெரியும். அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். நான் அரசியலில் நான்கு வகை மனிதர்களை பார்க்கிறேன். புத்திசாலிகள் , முட்டாள்கள் , புத்திசாலி மோசடிக்காரர்கள் , முட்டாள் மோசடிக்காரர்கள். இந்த நான்கு விதமான மனிதர்களை சரியாக கையாண்டுவிட்டல் விஜய் நிச்சயம் அரசியலில் ஜெயித்துவிடுவார் " என எச் வினோத் கூறியுள்ளார்





















