Vinayakan: பொன்னியின் செல்வன் முதல் கே.ஜி.எஃப் வரை.. ஜெயிலர் நாயகன் விநாயகன் நடிக்க மறுத்த படங்கள்!
மலையாளம் கலந்த தமிழில் மிரட்டுவது.. மனசிலாயோ என்று சொல்வது.. தனது துடிப்பான உடல் மொழி என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளினார் விநாயகன்!
பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப் , ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தும் அதை மறுத்துள்ளார் ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்து அசத்திய பிரபல நடிகர் விநாயகன்.
விநாயகன்
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஷிவராஜ்குமார், மோகன்லால் என பல நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தில் வில்லன் வர்மனாக நடித்திருந்த விநாயகனின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருந்தது.
மலையாளம் கலந்த தமிழில் மிரட்டுவது.. மனசிலாயோ என்று சொல்வது.. தனது துடிப்பான உடல் மொழி என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளினார். ஜெயிலர் படத்தில் விநாயகனின் நடிப்பைப் பார்த்து ஏன் அவர் பிற மொழிப் படங்களில் அதிகம் நடிப்பதில்லை என்கிற கேள்வி எழுப்பினர் ரசிகர்கள். சமீபத்தில் மலையாள இயக்குநர் ஒருவர் விநாயகன் குறித்து தெரிவித்துள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
நடிக்க மறுத்த விநாயகன்
மலையாளத்தில் ‘காசர்கோல்டு’ படத்தை இயக்கியிருக்கும் மிருதுல் நாயர் சமீபத்தில் விநாயகனுக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார். ”காசர்கோல்டு படத்தின் படப்பின்போது விநாயகன் சேட்டன் அடுத்து நடித்து வரும் படங்களைப் பற்றி நான் கேட்டேன். இப்போதைக்கு தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்றும், ஜெயிலர் தவிர்த்து ஒரு சில படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்புகள் வந்ததாகவும் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
நான் அவரிடம் இதுவரை அவர் எந்த எந்த படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் என்று கேட்டேன். பொன்னியின் செல்வன், கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் அதில் நடிக்க தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார். அவருக்கு என்று ஒரு போக்கு இருக்கிறது. அதன்படிதான் அவர் நடப்பார்” என்று மிருதுல் நாயர் கூறினார்.
வீட்டைவிட்டு வெளியே வர முடியல..
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். நான் படப்பிடிப்பில் இருந்தபோது நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக என்னுடைய மேனேஜர் கூறினார். ரஜினிகாந்தின் படம் என்றதும் படத்தில் நடிக்க நான் உடனே சம்மதித்தேன்.
எப்போது நான் படத்தின் கதையை கேட்கமாட்டேன். நான் நடித்த வர்மன் கதாபாத்திரத்தை மட்டும் எனக்கு சொன்னார் நெல்சன். நெருங்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.. ”ஸ்வப்பனத்தில கூட யோசிக்கல சாரே” என்று. இந்த மாதிரிதான் உண்மை நிலையும்.. வர்மன் கதாபாத்திரம், நான் வீட்டைவிட்டு வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை.
இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நான் மிக சந்தோஷமாக நடித்தேன். தூங்கும் காட்சியாக இருந்தாலும், நகம் கடிக்கும் காட்சியாக இருந்தாலும் எல்லா காட்சிகளையும் நான் ரொம்ப சந்தோஷமாகவே நடித்தேன்” என்று விநாயகன் கூறியுள்ளார்.