Vijay - Nelson: அப்போ அவ்ளோதானா நம்ம பழக்கம்... மெசேஜ் செய்த விஜய்.. நெல்சன் சொன்ன தகவல்!
பீஸ்ட் படத்தின் தோல்வி, ஜெயிலர் படத்தின் வெற்றி இரண்டையும் நடிகர் விஜய் எப்படி எடுத்துக்கொண்டார் என்று நெல்சன் பேசியிருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. பீஸ்ட் படத்தின் தோல்விக்காக இணையவாசிகளால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட அதே நெல்சனை இன்று பாராட்டித் தள்ளுகிறார்கள்.
யார் என்ன சொன்னாலும் நெல்சனுக்கு விஜய் சொன்ன வார்த்தைகள் தான் அவரை தொடர்ந்து இயங்க வைத்து இன்று ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றன!
இது இல்லனா வேற ஒன்னு!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது பீஸ்ட் திரைப்படம். இதனையடுத்து நெல்சன் இயக்கவிருந்த ஜெயிலர் திரைப்படமும் அவரை விட்டு ஒரு கட்டத்தில் கை நழுவிப் போகும் வாய்ப்புகள் இருந்தன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் மேல் வைத்த நம்பிக்கையே இதனை சாத்தியப்படுத்தியது. அதே நேரத்தில் நெல்சனின் மேல் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் நடிகர் விஜய். பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நெல்சன் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தனக்கும் விஜய்க்கும் இடையில் நடந்த உரையாடலை தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“பீஸ்ட் படம் வெளியாகி விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. விஜய் என்னிடம் “சரி விடு நம்ம ஒன்னு பண்ணியிருக்கோம். அது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காம போயிருக்கலாம். நீ என்கிட்ட சொன்ன கதைய எடுத்த அது நல்லா இல்லனு சொன்னா, அடுத்த முறை நல்லா பண்ணலாம்” என்று சொன்னார்.
நான் அவரிடம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் அவர் என் மேல் கோபமாக இருக்கிறாரா என்று கேட்டேன். அவர் பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். பின் எனக்கு ஃபோன் செய்து “அப்போ இந்த ஒரு படம்தான் உனக்கும் எனக்கும் இருக்க பழக்கமா. நீ இப்டி கேட்டது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம ஒன்னு பண்ணோம். அது நல்லா இல்லனா வேற பண்ணிக்கலாம். அவ்ளோதான்” என்று அவர் சொன்னார்.
Vijay nov ♥️pic.twitter.com/YBwBER286U
— Loki | Alter Ego (@thzLoki) August 12, 2023
பல நேரங்களில் என்னை ஊக்குவித்திருக்கிறார்!
”ஜெயிலர் திரைப்படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லி அவர் அதில் நடிக்க சம்மதிப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் விஜய் தான் என்னை இந்தக் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லி அதை ரஜினியிடம் போய் சொல்ல சொன்னார்.
மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் போது நான் மனம் சோர்ந்து இருக்கும்போது எல்லாம் அவருக்கு ஃபோன் செய்து பேசுவேன். அப்போது அவர்தான் என்னை ஊக்குவித்து தைரியம் சொல்லியிருக்கிறார். இப்போது ஜெயிலர் படத்தின் வெற்றியைக் கேள்விப்பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் செய்திருந்தார்” என்று நெல்சன் அந்த நே.ர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனைக் கேட்ட விஜய் ரசிகர்கள் எல்லாம் “யார் பெற்ற மகனோ நீ” என்று தியாக கீதம் போட்டு விஜய்யை கொண்டாடி வருகிறார்கள்.