10 ஆண்டுகளில் மறந்துவிடும்.. கனவு காணாதீர்கள்.. அதுவாகவே மாறுங்கள் - இளையராஜாவின் அறிவுரை
கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையராஜா மாணவர்களிடையே உரையாற்றி, அவர்களை வாழ்த்தியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, `நெற்றி வியர்வை நிலத்தில் விழ இங்கு அமர்ந்திருக்கும் மாணவ மணிகளே.. உங்களை எல்லாம் சந்திக்கக் கூடிய வாய்ப்பை இறைவன் எனக்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். என்னால் இந்த விழாவுக்கு வந்திருக்கவே முடியாது.. அடுத்த படத்திற்கான பின்னணி இசை அமைத்து அனுப்ப வேண்டிய பணியை இன்று செய்து கொண்டிருந்தேன். இன்று அதனை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும். நான் இசையமைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன்.. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மீண்டும் சென்று பின்னணி இசைப் பணிகளை செய்து, அதனை முடித்து தயாரிப்பாளர் கைகளில் கொடுத்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தன் அருகில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியைச் சுட்டிக்காட்டி பேசிய இளையராஜா, `இது சார் மாதிரி ஆட்களுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அவர் நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய புதிய இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்து, புதிய புதிய கதைகளைத் தேர்ந்தெடுத்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். ஒன்றுமே இல்லாமல் இங்கே வந்த விஜய் சேதுபதி அவர்கள்.. ஒன்றுமே இல்லாமல் இங்கே வந்த `இசைஞானி’ இளையராஜா அவர்கள்.. அப்படிப்பட்டவர்களுக்குத் தான் திறந்த மனம் இருக்கும். இந்த மனது உங்களுக்கும் இருக்க வேண்டும். எல்லார் மனதும் ஒன்றுதானே? மனதிற்கு ஏதேனும் ரூபம் இருக்கிறதா? அதனால் உங்கள் மனதைத் திறந்து வையுங்கள்.. மனசைத் திறந்து விடுங்கள்.. அது சிறகடித்துப் பறக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், `மாணவ மணிகளே.. உங்கள் வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள்.. என்னென்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் சாதித்துவிடுங்கள்.. ஆனால் `கனவு காணுங்கள்’ என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.. ஏனென்றால் கனவு என்பது பொய்.. கனவு காண்பவனும் பொய்.. கனவில் கிடைக்கும் அறிவும் பொய். நிஜத்தில் நடப்பவையே கனவுபோல மறைந்துவிடுகிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்தால், அது உங்கள் நினைவில் இருக்காது. அதனால் கனவு காண்பதை விடுங்கள்.. நீங்கள் எதுவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதுவாக மாற முயற்சி எடுங்கள்.. நான் இசையமைப்பாளரானது போல நீங்களும் நீங்கள் நினைக்கின்ற இடத்தை அடைய முடியும். அந்த முனைப்போடு, அதே நினைப்போடும், அல்லும் பகலும் இடைவிடாது என்றும் இருந்தால், நீண்ட ஆயுள், நிறை செல்வம், ஓங்குபுகழ், மெய்ஞானம் பெற்று வாழ மாணவ மணிகளை வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.