''நான் ஹோம் வொர்க் செய்த ஒரே பாடல் இதுதான்!'' - இசையமைப்பாளர் இளையராஜா ஷேரிங்ஸ்!
முதலில் ஏதோ ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடும்படிதான் இயக்குநர் கேட்டார். நான் தான் அதே ராகத்தில் நாட்டுப்புறப்பாடலைக் கொண்டுவர வேண்டும் என முடிவு செய்தேன்.
இசை என்பது பேரூற்று என்றால் அதில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை வற்றாத பேரூற்று.அவரது சினிமா இசை அனுபவம். அவரது ஒவ்வொரு பாடலும் வரலாறு எனச் சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு பாடல் இசையமைப்புக்கும் பின்னணியில் அப்படி அழுத்தமானதொரு கதை இருக்கும். அவரது இசைக்காகவே படம் இயக்கிய இயக்குநர்கள் ஏராளம். அவர்கள் அனைவருடனான ஒரு கலந்துரையாடலில் இளையராஜா பகிர்ந்த இசை அனுபவங்களின் ஒரு பகுதி.
அவர் கூறுகிறார், ‘நான் சினிமாவில் நிறைய சேலஞ்சிங்கான விஷயங்களை எடுத்துச் செய்திருக்கிறேன்.ஒவ்வொரு படமும் எனக்குப் புதுப்படம்தான். குறிப்பாக சிந்துபைரவி படத்தில் சிவக்குமார் கர்நாடக சங்கீதம் பாட அதற்கு இடைமறிக்கும் சுஹாசினி எல்லாருக்கும் புரியும்படி பாடக் கேட்கும் காட்சியில் கர்நாடக சங்கீதத்தையும் நாட்டுபுறப் பாடலையும் இணைப்பது கடினமாக இருந்தது.முதலில் ஏதோ ஒரு நாட்டுப்புறப்பாடலைப் பாடும்படிதான் இயக்குநர் கேட்டார். நான் தான் அதே ராகத்தில் நாட்டுப்புறப்பாடலைக் கொண்டுவர வேண்டும் என முடிவு செய்தேன்.
நான் அதற்காக ஹோம்வொர்க் செய்தேன். நான் ஹோம்வொர்க் செய்த ஒரே பாடலும் அதுதான். மரிமரிநின்னே முரளிட பாடலுக்கு தியாகராஜர் வேறு ராகத்தில் இசையமைத்திருந்தார். நான் இந்தப் பாடலுக்கு வெறுமனே ஸ்வரம் மட்டும் எழுதி முடித்துவிட்டு தெலுங்குக் கவிஞர் யாரையேனும் கூப்பிடுவதாகத்தான் திட்டம். பிறகுதான்,தியாகப்பிரம்மத்தின் கீர்த்தன மணிமாலைகளைப் பார்க்கலாமே எனப் புரட்டினேன். எனது ஸ்வரத்துக்கு ஏற்ற பாடல் எதுவும் இருக்கா எனத் தேடுகையில் முதலிலேயே அவரின் மரிமரி நின்னே கிடைத்தது.
பிறகு அதே ராகத்தில் அமைந்த நாட்டுப்புறத்தின் ஒரிஜினல் பாடலான பாடறியேன் படிப்பறியேன் பாடலைக் கொண்டு வந்து அதில் சேர்த்தோம். இயக்குநர் பாலச்சந்தரிடம் அதைப் போட்டுக் காட்டினேன்.இதையும் சொன்னேன். ‘சார் இந்தப் பாடலைக் கேட்டுட்டு தியேட்டரில் கைத்தட்டல் வரலைன்னா நான் இசையமைக்கறதையே நிறுத்திக்கறேன்’ என்றேன்.பாலச்சந்தர் தியேட்டர் போயிட்டு வந்தவர், ’ராஜா தியேட்டர்ல கைத்தட்டல் ஓயலை’ என்றார். இப்படித்தான் அந்தப் பாடல் அமைந்தது ’ எனப் பகிர்ந்தார்.
முன்னதாக, அலைகள் ஓய்வதில்லை தொடங்கி என்னுயிர் தோழன் வரை பல படங்களை தயாரித்த இளையராஜாவின் பாவலர் கிரியெஷன்ஸ் நிறுவனம் ஒரு கட்டத்தில் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்துக்கு உயிர்க் கொடுக்கும் முயற்சியில் இளையராஜா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகிய முன்னணி கதாநாயகர்களிடம் தேதிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அவர்களில் யாராவது ஒத்துழைக்கும் பட்சத்தில் பாவலர் கிரியேஷன்ஸ் மீண்டும் புத்துணர்ச்சியோடு வரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.