28 ஆண்டுகள்.... அழைப்பு விடுத்த இளையராஜா... முதல் ஆளாய் ஓகே சொன்ன ரஜினி...! மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி!
இயக்குனர் பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா என்பதால் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது என்று பேசப்படுகிறது.
இளையராஜா சூப்பர் ஸ்டார் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்த போதே பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். அதில் ரஜினியின் ராஜாதி ராஜாவும் ஒன்று. கமலஹாசன் நடிப்பில் வந்த சிங்காரவேலன் திரைப்படமும் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வந்ததுதான். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி என்னுயிர் தோழன் வரை பல படங்களை தயாரித்த அந்த நிறுவனம் ஒரு கட்டத்தில் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்துக்கு உயிர்க் கொடுக்கும் முயற்சியில் இளையராஜா இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகிய முன்னணி கதாநாயகர்களிடம் தேதிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அவர்களில் யாராவது ஒத்துழைக்கும் பட்சத்தில் பாவலர் கிரியேஷன்ஸ் மீண்டும் புத்துணர்ச்சியோடு வரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
கடந்த வருடம் இளையராஜா புதிய ஸ்டுடியோ சென்றதில் இருந்தே பெரிய திரைப்படங்களுக்கு மீண்டும் இசையமைக்க தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இளையராஜாவின் பாடல்களை நாஸ்டால்ஜியாவாக 2கே கிட்ஸ் கேட்க தொடங்கிய காலமும் வந்ததால், ஸ்பாட்டிஃபை இளையராஜாவின் ஹிட் பாடல்களை எல்லாம் அள்ளிக்கொண்டது. அது மட்டும் இன்றி 'ராஜா ஆஃப் மியூசிக்' என்று நியூ யார்கில் ஒளிரவிட்டது. புதிய ஸ்டுடியோ தொடங்கியதில் இருந்து, ரஜினி அடிக்கடி அங்கு சென்று இளையராஜாவுடன் நெடுநேரம் பேசி இருந்துவிட்டு வருவதாக கூறப்பட்டது. அந்த இடம் மிகவும் அமைதியாகவும், மனதிற்கு இதமாகவும் இருப்பதாக ரஜினி தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அதே நேரத்தில் இளையராஜா பாவலர் கிரியேஷன்ஸை மீண்டும் உயிர்பிப்பதால், அந்த உயிரோட்டத்திற்கு உயிரூட்ட முதலில் வரமாட்டாரா என்ன?...
அந்த வகையில் கிடைத்துள்ள தகவல் படி இளையராஜா தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பெரிய திரைப்படங்களை இந்தியில் உருவாக்கிய ஆனந்த் பால்கி இத்திரைப்படத்தை இயக்குவதாக தெரிகிறது. தமிழரான ஆர்.பால்கி, அமிதாப் பச்சனின் 'சீனி கம்', 'பா' மற்றும் 'ஷமிதாப்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். அக்ஷய் குமாருடன் 'பேட்மேன்' மற்றும் 'மிஷன் மங்கள்' படங்களிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார். 'ராஞ்சனா' படத்திற்குப் பிறகு இந்தியில் தனுஷ் நடித்த இரண்டாவது படமான 'ஷமிதாப்' படத்தின் இயக்குநரும் இவரே. இவர் ரஜினியுடன் திரைப்படம் தமிழ், இந்தி முதலிய அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா என்பதாலும், 28 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணையும் திரைப்படம் என்பதாலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது என்று பேசப்படுகிறது. பால்கி, ரஜினியை வைத்து இயக்கும் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் - இளையராஜா இணையும் படம் இதுவாகவிருக்கும். இவர்கள் கடைசியாக 1994-ம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் 1970களில் (1975-1979) தமிழில் மட்டுமே 34 படங்களில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என்று பம்பரமாக சுழன்று பிசியாக நடித்த காலகட்டம் அது.1975 முதல் 1979 வரை ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழில் வெளியான 34 திரைப்படத்தில் 13 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. 1980 முதல் 1989 வரை ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் மட்டும் (கௌரவ தோற்றம் நீங்கலாக) 50 படங்களில் நடித்துள்ளார்.அதில் இளையராஜா இசை அமைத்த திரைப்படங்கள் 33 ஆகும். 50 படங்களில் 33 திரைப்படத்துக்கு இளையராஜா ரஜினியுடன் பணியாற்றிருக்கிறார். மற்ற 17 படங்களில் பெரும்பாலும் தயாரிப்பாளருக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இசையமைக்க தவறிய படங்களாக இருந்தன. R M மூவிஸ் வீரப்பனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ராணுவவீரன், மூன்றுமுகம், ஊர்காவலன் ஆகிய திரைப்படங்கள் சங்கர்-கணேஷுக்கு சென்றது. 1990 களில் ரஜினிகாந்த் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவர் 1990 முதல் 1999 வரை இந்த பத்தாண்டுகளில் தமிழில் மட்டும் அவர் நடித்த படங்கள் வெறும் 16 மட்டுமே. அதில் பாதிக்கும் மேலே இளையராஜா இசையமைத்தவயே… 16 படங்களில் 9 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் 1977 முதல் 1994 வரை இந்த 17 ஆண்டுகளில் தமிழில் நடித்து வெளியான 93 படங்களில் 55 படங்களுக்கு இளையராஜா இசை அமைப்பாளராக இருந்துள்ளார். ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மற்ற இசை அமைப்பாளர்களை விட இளையராஜாவுடனே அதிக முறை பயணித்திருக்கிறார் ரஜினிகாந்த். கவிக்குயில் திரைப்படம் தான் ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு முதன் முதலில் இசை அமைத்தார் இளையராஜா. ஆனால், அந்த படத்தின் நாயகன் சிவகுமார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த அறிமுக படமான பைரவி தான் இளையராஜா இசைமைப்பில் வெளியான முதல் ரஜினிகாந்தின் படமாகும். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே இளையராஜாவுடனே தொடங்கியது. இந்த பயணம் வீரா வரை தொடர்ந்தது.
தமிழ் சினிமாவில் வெற்றியை கொடுப்பதை விட அந்த வெற்றியை தக்கவைப்பதில் தான் சாமர்த்தியமே உள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த் ஒரு சாமர்த்தியசாலியே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ந்து வரும் வெற்றி படத்தின் இயக்குனர்களோடு இணைந்து தன்னை புதுப்பித்து கொள்வார். அப்படி 1990களில் மிகப்பெரிய வெற்றி படங்களை தந்த கமர்சியல் பட இயக்குனர்களான சுரேஷ் கிருஷ்ணா, கே. எஸ். ரவிக்குமார் இருவருடன் இணைந்து படங்களை பண்ணியதால் ரஜினி இளையராஜாவுடன் சேர முடியாமல் போனது. சுரேஷ் கிருஷ்ணாவுடன் அண்ணாமலை படம் படத்தின் இசை அமைப்பாளர் தேவா. அதற்கு காரணம் தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர். இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தேவாவை அவர் படத்தின் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். அண்ணாமலை என்ற மாஸ் படத்துக்கு பிறகு வீரா ஒரு மென்மையனா இசையும், காதலும், காமெடியும் கலந்த ஒரு படம் என்பதால் சுரேஷ் கிருஷ்ணா இளையராஜாவிடம் சென்றார். பாட்சா ஒரு மாஸ் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என்பதால் சுரேஷ் கிருஷ்ணாவின் விருப்பம் தேவாவாக இருந்தது. படத்தின் பாடல்கள், மாஸ் காட்சிகளுக்கான பின்னணி இசை , சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு இசை, ரஜினிகாந்தின் அறிமுக காட்சி போன்றவை படத்தின் இமாலய வெற்றிக்கு தேவாவின் இசை முக்கிய காரணமாக இருந்தது. மாஸாக பின்னணி இசை இருக்கவேண்டும், பாடல்கள் லோக்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக இவருடைய விருப்பமும் தேவாவாகதான் இருந்தது. ரவிக்குமாரின் நாட்டாமை என்ற வெள்ளி விழா படத்துக்கு பிறகு ரஜினி முத்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ரவிக்குமார் இளையராஜாவுடன் இணைந்து இதுவரை இரு படங்களில் மட்டுமே இணைந்து பணிபுரிந்துள்ளார். அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் தேவா தான் மேலும் முத்து படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தர். ஆதலால், அன்று இளைஞர்களை தன் வசப்படுத்திருந்த ரஹ்மானை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தர்.
வீரா திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினிபேசும்போது, "நாங்கள் எல்லாம் வெயில்,மழை பாராமல் கஷ்டப்பட்டு நடித்து பெயரும்,புகழும் வாங்க வேண்டியுள்ளது. இளையராஜாவோ, ஏசி அறையில், ஜாலியாக இசையமைத்தே பெயரும்புகழும் பெற்றுவிடுகிறார்" என்று கூற, பதிலளித்துப் பேசிய இளையராஜா "இசையமைப்பதென்றால் சாதாரண விஷயமா? நான் வேண்டுமானால் நடிக்கிறேன்; ரஜினிகாந்த் வேண்டுமானால் இசையமைத்துப் பார்க்கட்டும்" என்று கூறிவிட்டார். ஒரு பிரமுகர், இருவரையும் சமரசமாக்கும் முயற்சியாக "இளையராஜா நடித்த படத்தை யார் பார்ப்பார்கள்? ரஜினிகாந்த் இசையை யார் கேட்பார்கள். அவரவர், தங்களுக்குத் தெரிந்த வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் நல்லது" என்று பேசிவிட்டார். இதனால் ரஜினிகாந்த்−இளையராஜா இடையே மனஸ்தாபம் மூண்டு, பிரிந்ததாகக் கூறுவார்கள். இன்னொருபுறம் "கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட" பாடல் பிடிக்கவில்லை என்று ரஜினி சொன்னதாகவும், இது தான் ட்யூன் இது ஹிட் ஆகும் என்று இளையராஜா சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடிக்காமல் சண்டை வந்தது என்றும் கூறுவார்கள். பின்னர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையமைக்கும் படங்களிலேயே நடித்தால், பாடல்களில் ஒருவித தொய்வுத்தன்மை ஏற்படும். ஆகவே, சிலபடங்களில் குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையில் நடித்துவிட்டு, நடுவில் வேறு சில இசையமைப்பாளர்களைத் தன்படங்களுக்கு இசையமைக்கச் செய்து அந்த படங்களிலும் நடிப்பது வழக்கம். மீண்டும், குறிப்பிட்ட இசையமைப்பாளரை, தனது படங்களுக்கு இசையமைக்க வைப்பார். இதனால் பாடல்களில், ஒரே மாதிரி பாணியிலான இசைத்தொய்வு நேராது; இசைரசிகர்களுக்கும் வித்யாசமான இசை விருந்து கிடைக்கும். உதாரணமாக, "ஆயிரத்தில் ஒருவன்" படத்திலிருந்து, எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார். ஆனால் அவரையே தொடர்ந்து, தனது படங்களுக்கு இசையமைக்க விடாமல், நடுநடுவே, கே.வி.மஹாதேவன், சங்கர் கணேஷ், குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோரையும் தான் நடித்த படங்களுக்கு இசையமைக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். பிறகு மீண்டும் தன்படங்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசையமைக்கவும் வைத்தார். இளையராஜா இசையிலும் "இதுதான் என் பதில்" படத்தில், எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்து, ஓரிரு பாடல்களும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையிலும் பிரேக் விட்டிருக்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அநிருத், வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இசையமைத்த படங்களில் நடித்தார். அப்போதைய ட்ரெண்டிற்கு அனைத்து இசையமைப்பாளர்களும் நல இசையை அவர் திரைப்படங்களுக்கு கொடுத்தாலும், மீண்டும் இளையராஜா இணைய வேண்டும் என்பது அனைத்து இசை ரசிகர்களும் விரும்பும் விருந்து. என்னதான் இளையராஜா கமல் கூட்டணி அதிக திரைப்படங்கள் இணைந்து வேலை செய்து பற்பல ஜானர்களில் இசையை தந்திருந்தாலும், ரஜினியுடன் ஒவ்வொரு படத்திலும் யதார்த்தமாக அமைந்துவிடும் அந்த ஒரே ஒரு மெலடிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உதாரணமாக, "வெள்ளை புறா ஒன்று", "காதலின் தீபம் ஒன்று", "சுந்தரி கண்ணால் ஒரு சேதி", "என் வானிலே", "கண்மணியே காதல் என்பது", "மாலை சூடும் வேலை", "பேச கூடாது", "தென்மதுரை வைகை நதி", என்று சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற பாடலகளை தரும் மனநிலையிலும் உற்சாகத்திலும்தான் இசைஞானி இப்போதும் இருக்கிறார் என்று அவரது 2022 நியூ இயர் ட்விட்டர் பதிவை எடுத்து பார்த்தால் தெரியும். அத்தனை துள்ளலுடன் இளமை இதோ இதோ பாடலை செல்பி விடியோ எடுத்தவாறு பாடிக்கொண்டு காரில் போகும் 21 வயது பையனாக திகழ்கிறார். ரஜினிகாந்த்தும் இளையராஜாவும் எதற்காக பிரித்தார்கள் என்று தெரியாது, ஆனால் வருடங்கள் 28 ஆகிவிட்டதால் என்ன சண்டை என்றே இருவரும் மறந்திருக்கக்கூடும். அதனால் மீண்டும் அவரது இசையில் ரஜினியை திரையில் காண ரசிகர்கள் இன்றளவும் காத்துதான் இருக்கின்றனர்.
2015 ஜூலை மாதம் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்காக என்னுள்ளில் எம்.எஸ்.வி என்று இளையராஜா எம். எஸ்.வி க்கு காணிக்கை செலுத்தும் விதமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் அழைக்கப்படவில்லை. அழைப்பிதழில் அவரது பெயர் இல்லை. இருந்தாலும் இளையராஜா எம்.எஸ்.வி க்காக செலுத்தும் காணிக்கை இசை நிகழ்ச்சிக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணி அவரே அழையாவிருந்தாளியாக சென்று ராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இளையராஜாவே ரஜினியை மேடையில் ஏற்றி நான் யாருமே கூப்பிடவில்லை எப்படி உங்களுக்கு மட்டும் இங்கே வரணும் தோன்றியது என்று கேட்பார் இளையராஜா. அதற்க்கு ரஜினிகாந்த் அளித்த பதில் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா அவர்கள் இசைஞானி என்றால் அமரர் எம்.எஸ்.வி அவர்கள் இசை சுவாமி. ஞானியால் தான் சுவாமிகளை பற்றி அறிந்து நம்மை போல சாதாரண பாமரர்களுக்கு எடுத்து உணர்த்துவார். என்று இரு பக்கமும் சரியாக பேலன்ஸ் செய்தார் ரஜினி. கடந்த ஆண்டு 2019 பிப்ரவரி மாதம் நடைபெற்ற இளையராஜா 75 என்று தமிழ் திரையுலகமே நடத்திய பிரம்மாண்டமான விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று 15 நிமிடம் இளையராஜாவின் பெருமையை பற்றி இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டினார். அப்போது அவர் பேசுகையில், “சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும். இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர். அது அபூர்வமாகவே உருவாகும். அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும். திரைத் துறைக்காக தியாகம் செய்தவர் இளையராஜா. இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. எனவே, ரஜினிகாந்த் எப்போதுமே இளையராஜாவை ஒரு மகான் உருவத்தில் பார்க்கிறார். ரமணமஹரிஷியை தனக்கு அறிமுகப்படுத்தியவர் இளையராஜா என்று ரஜினிகாந்தே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவை பற்றி பெருமை பேசுகிறார் விழாக்களில் சென்று கௌரவப்படுத்தியும் உள்ளார் ரஜினிகாந்த். இப்படி இருவரும் இணைந்து வேலை செய்யாமல் இருந்தாலும் என்றும் நட்பு பாராட்ட மறக்கவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படமான 'அண்ணாத்த' கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து யாரின் படத்தில் நடிப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட் பிரபு மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரில் யாரேனும் தான் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குவார்கள் என்ற பேச்சும் வலம் வருகிறது. இதற்கிடையில், பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் பால்கி சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 71 வயதை எட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த பான் இந்தியன் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும், அனைத்தும் சரியாக நடந்தால் இந்தப் படம் 'தலைவர் 169' ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.