Sivakumarin Sabadham | அதகளமாக ரிலீஸாகும் ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம்.. இதுதான் ரிலீஸ் டேட்..!
ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'சிவகுமாரின் சபதம்' படம் தியேட்டரில் வெளியாகுமென அறிவித்து வெளியீட்டு தேதியை வெளியிட்டது படக்குழு.
துள்ளலான ஹிப்ஹாப் இசையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் ஹிப்ஹாப் ஆதி பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து பட்டையைக் கிளப்பி வருகிறார். வணக்கம் சென்னை படத்தில் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் என்ற பாடலில் முதல் முறையாக தோன்றிய ஹிப்ஹாப் ஆதியை ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சுந்தர் சி.
தமிழ் ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு பரிச்சயமில்லாத ஹிப் ஹாப் இசையை தமிழ் சினிமாவில் முழுமையாக புகுத்திய பெருமை ஹிப் ஹாப் ஆதியையே சாரும். ஆம்பள வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த, சுந்தர்.சி மற்றும் விஷால் படங்களில் தொடர்ந்து இசை அமைப்பாளராக பணியாற்றி வந்த ஹிப்ஹாப் ஆதி, விஜய் சேதுபதியின் கவண், இமைக்கா நொடிகள் போன்ற பெரிய திரைப்படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்தார். மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்திருந்த ஹிப்ஹாப் ஆதிக்கு மீண்டும் சுந்தர்.சி கைகொடுக்கும் வகையில் இந்த படத்தை தயாரித்தும் இருந்தார். மீசைய முறுக்கு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து இளம் ரசிகர்களிடம் அதிக ஆதரவை பெற்று வருகிறார். அதே சமயம் தான் ஹீரோவாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் சொந்தமாக இசை அமைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் காமெடி படமாக வெளியானாலும் ரசிகர்களை அந்த அளவுக்கு கவரவில்லை. எனவே சுமாரான வெற்றியை மட்டுமே நான் சிரித்தால் பெற்றுத் தந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார்.
தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், தயாரிப்பு என, ஒரு நியூ ஏஜ் டிஆராக உருவெடுத்து அனைதையுமே ஆதிதான் செய்கிறார் என்பதால் படத்திற்கு தாறுமாறாக எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்த படம் மட்டுமின்றி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அன்பறிவு என்ற மற்றொரு படமும் செய்துகொண்டிருக்கிறார். ஜாலியான திரைப்படமாக உருவாகிவரும் இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி இது வரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் சிவக்குமார் பொண்டாட்டி, பாகுபலிக்கு ஒரு கட்டப்பா மற்றும் தில்லாலங்கடி லேடி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சிவக்குமாரின் சபதம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.
கொரோனா மற்றும் லாக் டவுன் காரணங்களால் தயாரிப்பாளர்கள் வேறு வழியில்லாமல் ஓடிடி தளம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கொரோனாவுக்கு மத்தியில் திரையரங்குகள் திறக்கப்படாத சூழ்நிலையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்று வந்தன. இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்பொழுது திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. தேக்கி வைக்கப்பட்டிருந்த பல திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதமும் தியேட்டரில் வரும் 30-ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு.
மேலும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு திரைப்படமான அன்பறிவு திரைப்படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கிறது மேலும் இதில் நடிகர் நெப்போலியன் மற்றும் ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.