Rajinikanth : இந்தியன் 2 படம் எப்டி இருக்கு? ஒரே வார்த்தையில் முடித்த ரஜினிகாந்த்
கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது என்று பத்திரிகையாளரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் ரஜினிகாந்த் கொடுத்த பதில் என்ன தெரியுமா?
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. சித்தார்த் , ரகுல் ப்ரீத் , சமுத்திரகனி , பிரியா பவானி சங்கர் , பாபி சிம்ஹா , விவேக் , மனோபாலா , மாரிமுத்து , நெடுமுடி வேனு , ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு வெளியான இந்தியன் 2 ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.
பெரியளவில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதபோது எடுக்கப் பட்ட முதல் பாகத்தில் திரைக்கதைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இரண்டாம் பாகத்திற்கு அளிக்கப்படவில்லை என்பதும். சுஜாதா போன்ற திரைக்கதை நுட்பங்களை தெரிந்த ஒரு எழுத்தாளர் ஷங்கருக்கு அமையாதது பெரும் குறையாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 வசூல்
இந்தியன் 2 இதுவரை இந்திய அளவில் 83 கோடியும் உலகளவில் 130 கோடியும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியன் 2 பற்றி ரஜினிகாந்த்
இந்தியன் 2 படத்தை விரைவில் பார்க்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் இன்று கேரளத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினி பதிலளித்தார். வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டபோது. ”வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு ஆகவில்லை தற்போது டப்பிங் பணிகள் சிறப்பாக நடந்து வருவதாக” அவர் தெரிவித்தார். இந்தியன் 2 படம் பார்த்தீர்களா படம் எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு ரஜினிகாந்த் ஒரே வார்த்தையில் ”நல்லா இருக்கு” என்று பதில் கொடுத்துள்ளார்.
#Indian2 - Good💥#Vettaiyan Release Date Yet to fbe finalized. Dubbing work is going good.🤙
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 21, 2024
- Superstar
pic.twitter.com/hBQxq9GzfL
பொதுவாக தனக்கு ஒரு படம் பிடித்துவிட்டது என்றால் அந்த படத்தைப் பற்றி ரஜினி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். மேலும் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி புகைப்படமும் வெளியாகும். மஞ்சும்மெல் பாய்ஸ் , ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களுக்கு ரஜினி அப்படி பாராட்டியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தியன் 2 படத்திற்கு அவர் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
கூலி
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.