HBD Trisha: “அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!
தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்திருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் திரிஷா தான்.
![HBD Trisha: “அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று! HBD Trisha tamil cinema actress trisha celebrated her 41nd birthday today HBD Trisha: “அவள் உலக அழகியே. நெஞ்சில் விழுந்த அருவியே” - நடிகை திரிஷா பிறந்தநாள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/fce6eb3759d19f117185e72f96f8f77b1714755468120572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா ( Trisha) இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
திரையுலக ராணி
பொதுவாக திரையுலகை பொருத்தவரை ஒரு ராசி உண்டு. அதாவது இங்கு பெண்கள் பல ஆண்டுகள் நீடித்து இருப்பது அதிசயங்களில் ஒன்றாக நடக்கும். இந்த காலகட்டத்தில் நடிகை, துணை நடிகை, குணச்சித்திர கேரக்டர், கேமியோ கதாபாத்திரம் என பெண்களின் நிலை என்பது மாறும். ஆனால் தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஹீரோயினாக நடித்து வருகிறார் திரிஷா. இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்திருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு தெரிந்த நடிகையாக இருப்பவர் திரிஷா தான்.
திரைக்கு பின்..
சென்னையை பூர்வீகமாக கொண்ட திரிஷா 1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறந்தார். சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், எத்திராஜ் கல்லூரியில் பயின்றார். அப்போது மாடலிங்கில் ஆர்வம் உண்டாகவே அதில் தீவிரமாக களமிறங்கினார். இதன் விளைவாக 1999 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். மேலும் 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை வென்றார்.
திரைக்கு முன்..
பிரஷாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றியிருப்பார் திரிஷா. இதன் பின்னர் 2002ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான “லேசா லேசா” தான் ஹீரோயினாக முதல் படம். ஆனால் இப்படம் ரிலீசாவதற்குள் சூர்யா நடித்த “மௌனம் பேசியதே” வெளியாகி தமிழ்நாடு முழுவதும் தெரிந்த முகமானார் திரிஷா. பின்னர் சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், மன்மதன் அம்பு, மங்காத்தா, கொடி, 96, பொன்னியின் செல்வன் என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தார்.
இவர் மட்டும் தான் கடந்த 2 தசாப்தங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகையாவார். சந்தியா (மௌனம் பேசியதே), தனலட்சுமி (கில்லி), கவிதா (உனக்கும் எனக்கும்), அபி (அபியும் நானும்), ஜெஸ்ஸி (விண்ணைத்தாடி வருவாயா),ஹேமானிகா (என்னை அறிந்தால்), ருத்ரா (கொடி), ஜானு (96), குந்தவை (பொன்னியின் செல்வன், தையல் நாயகி (ராங்கி) ஆகிய பெயர்கள் திரிஷாவின் மிகச்சிறந்த கேரக்டர்கள்.
2000க்குப் பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹீரோயின்களில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதே மிகப்பெரிய சாதனை தான். கதையின் நாயகி திரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)