HBD Suriya: ரசிகர்களின் மனதில் மின்னும் தங்கம்.. எங்கள் சிங்கம் ‘சூர்யா’வின் பிறந்தநாள் இன்று...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவான சரவணன்
பொதுவாக எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் வாரிசுகளின் வருகை என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் அந்த துறையில் தங்கள் திறமையால் கோலோச்சி நிற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான். அதேசமயம் சாதித்து காட்டிவிட்டால் அவர்களே நினைத்தாலும் அந்த துறை கைவிடாது. அப்படி ‘திரையுலக மார்க்கண்டேயன்’ என அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானர். உண்மையில் சூர்யாவின் இயற்பெயரே சரவணன் தான். ஆனால் இயக்குநர் வசந்த் சூர்யா என மாற்றினார்.
தனது முதல் படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார். அதன்பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார், பெரியண்ணா, உயிரிலே கலந்தது, ப்ரண்ட்ஸ் என அடுத்தடுத்த படங்கள் சூர்யாவை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தாலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘நந்தா’. அநீதியைக் கண்டு பொங்கியெழும் முரட்டு இளைஞனாக அசத்தியிருந்தார். சூர்யாவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர்.
தொடர்ந்து ஏறுமுகம்
இந்த படத்தின் தாக்கம் சூர்யா என்னும் கலைஞனை தமிழ் சினிமா கொண்டாட தொடங்கியது. தொடர்ந்து பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, கஜினி, பேரழகன், ஆயுத எழுத்து, ஆறு, வாரணம் ஆயிரம், வேல் என படங்களுக்கு படம் வேறுபாடு காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். சூர்யாவின் கேரியரில் அடுத்த அத்தியாயத்தை எழுதியது அயன் மற்றும் சிங்கம் படங்கள் தான். இந்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்க திக்குமுக்காடினர் சூர்யா ரசிகர்கள்.
இதில் சிங்கம் படத்தின் தாக்கம், அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் எடுக்க காரணமாக அமைந்தது. ஒட்டிப் பிறந்த இரட்டையராக மாற்றான் படத்திலும், நெகட்டிவ் கேரக்டரோடு ‘24’ படத்திலும் நடித்து பிரமிக்க வைத்தார். இப்படி சென்று கொண்டிருந்த சூர்யாவின் வாழ்க்கையை திசை திருப்பியது சூரரைப் போற்று திரைப்படம்.
தேசிய விருது நாயகன்
உலகமே கொரோனாவால் அல்லாடி மீண்டு கொண்டிருக்கும்போது தனது சூரரைப் போற்று படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. உண்மைக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பு ஆகிய 5 பிரிவுகளில் தேசிய விருதை வென்று அசத்தியது.
இதனால் தன்னை மெருகேற்றி கொண்டு அடுத்த அத்தியாயத்திற்கு சூர்யா தயாராகி விட்டார். விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்னும் அசாத்தியமான வில்லன் கேரக்டரில் நடித்த அவர், கங்குவா படத்தில் 13 விதமான தோற்றத்திலும் சூர்யா நடிக்கிறார். அதேசமயம் 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பு, அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி என பல பரிணாமங்களிலும் மிளிர்கிறார் சூர்யா. தன் முயற்சி மற்றும் வளர்ச்சியால் வானூயர வளர்ந்து நிற்கிறார் சூர்யா. அவருக்கு ஏபிபி நாடு சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!