HBD Rajinikanth: நட்புக்கு இலக்கணமாக திகழும் ரஜினிகாந்த்.. இதுதான் உண்மையான ஃப்ரண்ட்ஷிப்!
ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவர் மிகப்பெரிய நட்பு வட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கும் நண்பர் என முதலில் அவர் கைகாட்டுவது ராஜ்பகதூரை தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராகவும் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமாகும்போது அவருக்கு வயது 25 தான் ஆகியிருந்தது. பெங்களூருவில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்த அவர் சினிமா மீது கொண்ட பிணைப்பால் நடிப்பு கல்லூரியில் பயின்று பின் சினிமாவுக்குள் நுழைந்தார். ரஜினி நடிப்புத்திறமையை பார்த்து வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைத்தால் அதுதான் தவறு. உண்மையில் அவரின் ஸ்டைலை பார்த்து தான் கே.பாலசந்தர் வாய்ப்பு வழங்கினார். அவர் தான் சிவாஜிராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்தவர் என பல பெருமைக்கு சொந்தக்காரரான ரஜினி திரையுலகில் தனது 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இது சாதாரண விஷயமல்ல. ஒரு நடிகர் ஹீரோவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்தி சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்துள்ளது மாபெரும் சாதனை தான். ரஜினிக்கு 75 வயது ஆனாலும், ரசிகர்கள் முன் திரையில் தோன்றினால் அவர் என்றும் இளைஞர் தான்.
யோகா, ஆன்மிகம் என அனைத்திலும் நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் உடல்நலப் பாதிப்பு அடைந்த பிறகு மிகுந்த கவனமுடன் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் மற்றவர்கள் மாற வேண்டும் என அட்வைஸ் செய்யாமல் தான் அப்படியெல்லாம் இருந்தேன், இப்போது இப்படி ஆகிவிட்டது என தன் வாழ்க்கை கதையை சொல்லி மறைமுகமாகவே அறிவுரை வழங்குவார்.
நட்புக்கு இலக்கணமானவர்
ரஜினி பல விமர்சனங்களை சந்தித்தாலும் அவர் தன்னுடைய சில விஷயங்களில் அனைவரையும் கவர்ந்தவர். ஒன்று அவரின் ஆன்மிக தேடல். இமயமலை பயணம், பாபாஜி பற்றிய தகவல்கள் என அவர் சொன்னது அற்புதமான விஷயங்கள். அதேசமயம் இன்னொரு விஷயம் நட்புக்கு இலக்கணமாக திகழ்கிறார். ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவர் மிகப்பெரிய நட்பு வட்டத்தை வைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கும் நண்பர் என முதலில் அவர் கைகாட்டுவது ராஜ்பகதூரை தான்.
ரஜினியின் சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்தவர். அவருடன் பெங்களூருவில் பேருந்தில் டிரைவராக பணியாற்றியவர். ராஜ் பகதூர் தான் தனது தங்க செயினை விற்று ரஜினியை நடிக்க வைக்க அரும்பாடுபட்டார். அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை கண்டறிந்து ஊக்குவித்தார். இப்போது இந்த ரஜினி சினிமாவில் இருக்க மிக முக்கியமானவர்களில் ராஜ் பகதூர் தான் முதலில் உள்ளார்.
இந்த நன்றியை ரஜினி என்றைக்கும் மறப்பதில்லை. எந்த மேடையில் ஏறினாலும் தன்னுடைய நண்பர் ராஜ் பகதூரை பற்றி பேசாமல் சென்றதில்லை. சினிமாவுலகில் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நினைத்த எல்லாம் வந்த பிறகும் பழைய விஷயங்களை என்றைக்கும் மறக்கக்கூடாது என சொல்வார்கள். அதுதான் ஒருவரை உயர்த்திக் காட்டும். அந்த வகையில் ரஜினிகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு சூப்பர் ஸ்டார் தான்!





















