Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் சொல்லும் குறைபாடுகளை சரி செய்து அந்த சான்றிதழை பெறலாம். அதை விடுத்து பாரதிய ஜனதா கட்சியை குற்றம் சாட்டுகிறார்கள் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் மூத்த தலைவரான ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. அரசியலுக்கு சென்றுள்ள விஜய்யின் சினிமா கேரியரில் கடைசிப் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த நிலையில் இன்று இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, “பாரதிய ஜனதா கட்சி என்றைக்குமே அரசு அதிகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்தியது கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சிபிஐக்கு Congress Bureau of Investigation என்ற பெயரே இருந்தது. விஜய் அவர்களைப் பொறுத்தவரை கரூரில் நடந்த சம்பவத்திற்கு கூட நாங்கள் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. அப்படி இருக்கும்போது ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தணிக்கைத்துறை அதிகாரிகள் சொல்லும் குறைபாடுகளை சரி செய்து அந்த சான்றிதழை பெறலாம். அதை விடுத்து பாரதிய ஜனதா கட்சியை குற்றம் சாட்டுகிறார்கள். இந்த கட்சி இப்படியெல்லாம் செயல்படாது” என கூறினார்.
தொடர்ந்து அவரிடம், “ஜனநாயகன் விவகாரத்தில் திரையுலகம் முற்றிலும் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது. இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் பாஜக கூட்டணிக்கு வரும் என சொல்கிறார்கள். அதற்கான மிரட்டலான இந்த விஷயம் பார்க்கப்படுகிறதா?” என கேட்கப்பட்டது. அதற்கு, “தவெக - பாஜக கூட்டணி பற்றி யார் பேசியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் கூட்டணி பற்றி பேச மாட்டேன். சென்சார் போர்டு என்ன காரணத்திற்காக ஜனநாயகனுக்கு சான்றிதழ் தரவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. அதை தணிக்கை வாரியத்திடம் முறையிட வேண்டும். அதை விடுத்து இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் சில்லறை தனமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் விஜய்யை கரூர் விவகாரத்தில் ஆதரித்து தான் பேசினோம். எங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. கரூர் சம்பவத்திற்கு காவல்துறையின் அஜாக்கிரதை தான் என்பதை பலமுறை தெரிவித்து விட்டோம். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்தார்.
முன்னதாக ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் கட்சியை முதுகுக்கு பின்னால் கத்தியை வைத்துக் கொண்டு பேரம் பேசும் பழக்கம் உண்டு. இந்த விஷயத்தில் தணிக்கை வாரியம் சுதந்திரமாக தான் செயல்படுகிறது. சான்றிதழ் கொடுப்பார்கள். உண்மையில் பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் கரூர் சம்பவம் நடந்த செப்டம்பர் 27ம் தேதி கொடுத்திருக்கலாம். அன்றைக்கு மனிதாபிமானத்தோடு மத்திய அரசு, பாஜக செயல்பட்டது.
இல்லாவிட்டால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது. நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பதில்லை. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தான் சொல்லியது. அன்றைக்கு ஸ்பாட்டில் விஜய் இருந்ததால் தான் விசாரணைக்கு ஆஜராக சொல்லியிருக்கிறார்கள்” எனவும் கூறியிருக்கிறார்.





















