US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு கச்சா எண்ணெய் கிடைப்பதை தடுக்கும் விதமாக, வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இதனிடையே, அமெரிக்காவை வெனிசுலா அதிபர் டெல்சி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெனிசுலா நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. மேலும், காலவரையின்றி இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இதனால், சீனாவிற்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை கைப்பற்றிய அமெரிக்கா
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் சேர்த்து கைது செய்து, தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது அமெரிக்கா. அவர்கள் இருவரும் தற்போது அமெரிக்க சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வெனிசுலாவில் தற்போது தேங்கியிருக்கும் 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை உடனடியாக அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தற்போது டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய் விற்பனையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை அமெரிக்க கணக்குகளில் வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை காலவரையின்றி தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, வெனிசுலாவின் எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா தேர்ந்தெடுத்து திரும்பப் பெறுவதாகவும் எரிசக்தி துறை தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு சிக்கல்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சீனாவிற்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், வெனிசுலா இதுவரை தன் கச்சா எண்ணெயை அதிக அளவில் சீனாவிற்கே அனுப்பி வந்தது.
இந்நிலையில், வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதால், சீனாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகம் முற்றிலும் தடைபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் வெனிசுலா அதிபர் டெல்சி
இதனிடையே, அமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான VTV-யில், நேரடி ஒளிபரப்பின் போது பேசிய டெல்சி, "வடக்கின் எரிசக்தி பேராசை நமது நாட்டின் வளங்களை விரும்புகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். போதைப்பொருள் கடத்தல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அனைத்து பொய்களும் சாக்குப்போக்குகளாக இருந்தன" என்று கூறினார்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவை ஒப்புக்கொண்ட அவர், உள் நாட்டில் இருக்கும் பிளவுகளை நிவர்த்தி செய்ய, அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், "தீவிரவாத அல்லது பாசிச சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வெளிப்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும், ஏனெனில் அவை இந்த குடியரசின் வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்துள்ளன என்றும் கூறினார்.
இதனிடையே, அமெரிக்காவின் நடவடிக்கையால், வெனிசுலாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என்பதால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















