Goundamani re-entry: அடடே! சிவாவுக்கு பெரியப்பாவா?! களமிறங்கும் கவுண்டமணி! எகிறும் எதிர்பார்ப்பு!
கவுண்டமணியுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் காமெடி எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே ஆர்வம் கூடுகிறது. சூரி-சிவகார்த்திகேயன் காம்போவை பீட் செய்யுமா இந்த காம்போ என்பதை காத்திருந்து காண்போம்.

90ஸ்- களில் காமெடி என்றாலே கவுண்டமணி தான் நினைவுக்கு வருவார். காமெடி மன்னனாக வலம் வந்த இவர், தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்திருந்தார். அவரின் வசனங்களும் திட்டல்களும் ஒவ்வொரு டீக்கடையிலும், வீட்டு திண்ணைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னதான் 1960 ஆம் ஆண்டிலேயே சினிமாவுக்குள் நுழைந்து விட்டாலும், இவரது காலம் 1980 ஆம் ஆண்டில் இருந்து தான் தொடங்கியது.
அந்த காலத்தில் நடிகர் நடிகர்களை விட கவுண்டமணி - செந்தில் காமெடிக்காகவே மக்கள் படத்திற்கு செல்வதுண்டு. நகைச்சுவை காட்சிகளின் போது அரசியல் பேசுவது, சமூக சீர்கேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது என இவர் செய்ததும், செய்யத் துணிந்ததும் ஏராளம். எனினும், உருவ கேலி செய்வது, சக மனிதரை கீழ்த்தனமாக நடத்துவது என இவர் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தன. எண்ணிலடங்காத வெற்றி படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இவர், கடைசியாக வாய்மை என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
கவுண்டமணி ரீ என்ட்ரி:
தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'மாவீரன்'. இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. நகைச்சுவை கலந்த நடிப்புடன் கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அவரது படத்தில் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுப்பது இருவருக்குமே சிறந்த அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. அதிலும் காமெடி மன்னன் கவுண்டமணியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் காமெடி எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே ஆர்வம் கூடுகிறது. சூரி-சிவகார்த்திகேயன் காம்போவை பீட் செய்யுமா கவுண்டமணி - சிவகார்த்திகேயன் காம்போ என்பதை காத்திருந்து காண்போம். இப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று தகவல் வெளியாகிறது.மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்.கே.21 படத்தில் நடிக்க உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

