Genie : கமல் நடிக்கவேண்டியது.. நான்தான் உங்கள் ஜீனி என்று வந்தார் ஜெயம் ரவி.. சுவாரஸ்ய தகவல்..
ஜீனி படத்தின் கதையை கமல்ஹாசனை மனதில் வைத்து எழுதியதாக படத்தின் இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
படத்தின் கதையைக் கேட்ட ஜெயம் ரவி நான் தான் உங்கள் ஜீனி என்று கூறியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஜீனி
அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ஜீனி. இப்படத்தில் மூத்த நடிகை தேவயானி, இளம் நடிகைகளான க்ரித்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் , வாமிகா கப்பி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துஸ்வாமி ஒளிப்பதிவும், பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பும் கையாண்டுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐஷரி கணேசன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கடந்த சில நாள் முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.
கமலுக்காக எழுதிய கதை
தமிழ்,தெலுங்கு , கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது ஜீனி படம். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜீனியாக நடித்து ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கலாம். ஜீனி படத்தின் இயக்குநர் சமீபத்தில் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் இப்படத்தின் கதையை தான் உலக நாயகன் கமல்ஹாசனை மனதில் வைத்து எழுதியதாக அவர் கூறியுள்ளார். கமல்ஹாசனிடம் படத்தின் கதையை தான் சொல்ல முயற்சி செய்ததாகவும் ஆனால் இது தனது முதல் படம் என்பதாக கமலிடம் கதை சொல்லும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்தான் உங்கள் ஜீனி
#Genie - A Genie with a Twist.. It's a Fantasy film grounded with emotions..⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) March 27, 2024
• The Director says he had #Kamalhaasan in mind for the role and He tried for 3 years.. "All i wanted 5 mins of his time but sadly never got it.."
• Then I narrated the script to #JayamRavi .. He… pic.twitter.com/wOQPx2lj1g
பிறகு தான் படத்தின் கதையை தயாரிப்பாளர் ஐஷரி கணேசிடம் சொன்னதாகவும் அவர் உனக்கு ஜெயம் ரவி ஓகேவா என்று தன்னிடம் கேட்டதாகவும் கூறினார். ஜெயம் ரவி இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் ‘நான் தான் உங்கள் ஜீனி‘ என்று சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என்று அவர் தெரிவித்தார். இப்படத்தை தான் கமலுக்காக எழுதியிருந்தாலும் ஜெயம் ரவி இந்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் தற்போது இந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியைத் தவிர்த்து வேறு ஒருவரை தன்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை என்று இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப்
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் இருந்து வெளியேறினார் நடிகர் ஜெயம் ரவி. அரசியல் வேலைகளில் கமல் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போன காரணத்தால், அவர் இப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியானது.