Genelia Husband: மேடையில் உடைந்து அழுத நடிகை ஜெனிலியாவின் கணவர்: என்ன ஆச்சு?
பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், மறைந்த தன் தந்தையும் முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கில் சிலை நிறுவும் விழாவில் உடைந்து அழுத சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெனிலியாவின் கணவர்
பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என சூப்பர் ஹிட் படங்கள் தந்து 2000களின் மத்தியில் க்யூட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா (Genelia). தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு, இந்தி, மராத்தி என பிற மொழிகளிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகரும் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக்கை (Riteish Deshmukh) காதல் திருமணம் செய்தார்.
2003ஆம் ஆண்டு இந்தியில் ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் இருவரும் ஒன்றாக ‘துஜே மேரி கஸம்’ எனும் திரைப்படத்தில் இணைந்து அறிமுகமான நிலையில், தங்கள் முதல் படத்தில் இருந்தே இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தொடர்ந்து நீண்ட கால காதலுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 20212ஆம் தேதி பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
விலாஸ்ராவ் தேஷ்முக்
பாலிவுட்டின் க்யூட் ஜோடிகளில் ஒருவராக வலம் வந்து இன்றளவும் இந்த ஜோடி இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இந்த ஜோடிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களுக்கு திருமணமான சில மாதங்களிலேயே ரித்தேஷின் தந்தையும் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் (Vilasrao Deshmukh) உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான விலாஸ்ராவ் தேஷ்முக், 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மற்றும் 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை என 2 முறை மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதன் பின், மாநிலங்களவை அமைச்சராகப் பதவி வகித்த விலாஸ் ராவ் தேஷ்முக், இறுதியாக மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்நிலையில், நேற்று இவரது சொந்த மாவட்டமான மகாராஷ்டிர மாநிலம், லாட்டூரில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவரது மூன்று மகன்களில் ஒருவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் கலந்து கொண்டு கண்ணீர்மல்கப் பேசி காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘என் அப்பா வலிமையானவர்’
ஐயா நம்மை விட்டுப் பிரிந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவ்வப்போது எனக்கு இதை நினைக்கையில் நெஞ்சில் வலி கூடும். அவர் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தார், இப்போதும் அவர் பிரகாசிக்கிறார். இந்த பிரகாசம் ஒருபோதும் மறையாது.
அவர் வலிமையானவராக இருந்தார், அதனால் அவரது குழந்தைகளாகிய நாங்களும் நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், நம் மீது அவர் கொண்ட அன்பு தெளிவாகத் தெரிகிறது. அது இந்த மேடையில் பிரகாசமாக எரிகிறது.இதை நான் என் மாமா திலீப் தேஷ்முக்கிடம் இதுவரை சொன்னதில்லை, ஆனால் இன்று நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று அனைவரின் முன்னிலையிலும் சொல்ல விரும்புகிறேன்” எனப் பேசிய ரித்தேஷ் தேஷ்முக் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார்.
In the inauguration Program of statue of Late Vilasrao Deshmukh Riteish Deshmukh gets emotional while talking about his father Vilasrao Deshmukh ji .@Riteishd pic.twitter.com/hEQFkYMxQW
— Surbhi (@SurrbhiM) February 18, 2024
இந்நிலையில் அப்பாவைப் பற்றி பேசி மனமுடைந்து ரித்தேஷ் தேஷ்முக் அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இதயங்களை அள்ளி வருகிறது.