நடிகர் விஜய்யால் கிடைத்த இலவச பெட்ரோல்; வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி...!
சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டர் அணி சார்பாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வந்த அனைவருக்கும் இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் 48 வது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் என்றாலும், அன்று மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொண்டாட இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று பல்வேறு வகைகளில் விஜய் பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக விஜயின் பிறந்தநாள் அன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான அறிவகம் காப்பகத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் அவ்வியக்கத்தினர் காலை உணவு வழங்கி பரிமாறினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகிய நிலையில், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததால் இந்த காப்பகத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு 16 நாள் குழந்தையாக சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் லட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். அந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியில் தெரியவர பலதரப்பட்ட மக்களும் அந்த மாற்றுத்திறனாளி மாணவியை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அன்பகம் காப்பகத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அங்குள்ள மாணவர்களுக்கு காலை உணவை வழங்கியது மட்டுமல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் படித்து தேர்வு எழுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற லட்சுமியை சந்தித்து, வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவியாக அந்த மாணவியின் கல்லூரி படிப்புக்கான கல்வி செலவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், முதற்கட்டமாக முதல் பருவத்துக்கான தொகையாக 5000 ரூபாயினை காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினர். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் குட்டி கோபி கூறுகையில், தொடர்ந்து அந்த மாணவியின் முன்னேற்றத்திற்காக விஜயின் மக்கள் இயக்கம் உதவி செய்யும் என உறுதியளித்து சென்றார்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டர் அணி சார்பாக நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து வரும் அனைவருக்கும் முதல் நூறு நபர்களுக்கு தலா 100 ரூபாய்க்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தொண்டர் அணி தலைவர் தளபதி தினேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் விஜய் சுமன் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது தலைக்கவசம் வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு இருசக்கர வாகனங்களுக்கு தலா 100 ரூபாய் வீதம் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்