Actress Navya Nair: நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி.. பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது?
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த நவ்யா நாயர்
கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் நடிகை நவ்யா நாயர். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, கல்யாண ராமன், பட்டணத்தில் சுந்தரன், பாண்டிப்படை, சர்கார் தாதா, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர். இதனைத் தொடர்ந்து பாசக்கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி,அமிர்தம், சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்தார். அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கினார்.
மீண்டும் ரீ- எண்ட்ரி
இதனையடுத்து கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் அவரிடம் மீண்டும் திரையில் முழு நேர ஹீரோயினாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இப்படியான சூழலில் ஜானகி ஜானே படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இந்த படம் கடந்த மே 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்கள் சோகமாகும் வண்ணம் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
அதாவது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நவ்யா நாயர் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜானகி ஜானு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக அவர் சென்று கொண்டிருக்கிறார். அந்த வகையில் சுல்தான் பத்தேரி பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில் நவ்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் ஒருநாளில் அந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் நவ்யாவின் புகைப்படம் வைரலாகியுள்ள நிலையில், அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.