HBD K.S.Ravikumar : ”கொஞ்சம் முன்கோபி ...ஆனா நேர்மையான ஆள் “ - கே.எஸ்.ரவிக்குமாருக்கு இன்னைக்கு சிறந்தநாள்..
ஒதுக்கப்பட்டது எவ்வளவு பட்ஜெட்டோ அந்த பட்ஜெட்டுக்குள் கதையை முடித்து , அதனை வணிக ரீதியாக வெற்றியடைய வைப்பதுதான் ரவிக்குமாரின் ஸ்பெஷல் .
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களில் அடுத்தடுத்த ஹிட் கொடுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒரு மாஸ் ஹீரோவை எப்படியாக காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற வித்தை தெரிந்தவர். ரஜினி, கமல் , அஜித் என டாப் நடிகர்கள் உச்சத்தை தொட இவரின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்று என்றால் மிகையில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இன்று தனது 64 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு , அவர் திரையுலக பங்களிப்பை திரும்பி பார்க்கலாம்!
இயக்குநராக ! :
கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். சிறிது காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி “என் வழி தனி வழி “ என பயணிக்க தொடங்கியவர். முதன் முதலாக 1990 ஆம் ஆண்டு , ரகுமான் இயக்கத்தில் ‘ புரியாத புதிர்’ என்னும் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் த்ரிலிங் கதைக்களத்துடன் சூப்பர் டூப்பர் வெற்றிப்பெற்றது. கோலிவுட்டும் சிகப்பு கம்பளம் விரித்து , ரவிக்குமாரை வாரி அணைத்துக்கொண்டது. ஒதுக்கப்பட்டது எவ்வளவு பட்ஜெட்டோ அந்த பட்ஜெட்டுக்குள் கதையை முடித்து , அதனை வணிக ரீதியாக வெற்றியடைய வைப்பதுதான் ரவிக்குமாரின் ஸ்பெஷல் . இதனால் ரவிக்குமார் படம் என்றால் தயாரிப்பாளர்கள் , தயக்கம் இல்லாமல் பச்சைக்கொடி அசைத்துவிடுவார்களாம். சிலர் ரிலீஸ் தேதியை அறிவித்துதான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அட்வான்ஸே கொடுப்பார்களாம். அந்த அளவுக்கு தொழில் சுத்தம் . ரவிக்குமார் முன்கோபக்காரர் , நடிகர்களிடம் கிடுக்குபிடியாகத்தான் இருப்பாராம் , வேலையில் கராரான ஆள் என்கின்றனர். ஆனாலும் செய்யும் தொழிலுக்கு அத்தனை நேர்மையான மனிதர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் , நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி,நட்புக்காக , படையப்பா, சுயம்வரம் , மின்சார கண்ணா, பஞ்ச தந்திரம் ,சமுத்திரம் , தசாவதாரம் என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படங்கள் . இது தவிர இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவர் இயக்கிய படங்கள் மாஸ் வெற்றியடைந்திருக்கிறது.
நடிகராக !
தான் ஒரு இயக்குநராக அவதாரம் எடுப்பதற்கு முன்னதாகவே நடிகராக அறிமுகமானவர் கே.எஸ்.ஆர். 1986 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் பூக்கள் பூக்கட்டும் படத்தில் மோகனுடைய நண்பராக நடித்திருந்தார். அதன் பிறகு ராஜா ராஜாதான்,புது வசந்தம், பொண்ணுவீட்டுக்காரன் , அருள் , விண்ணைத்தாண்டி வருவாயா,தங்க மகன் , றெக்க,கோமாளி என பல படங்களில் கௌரவ தோற்றம் முதல் குணச்சித்திர தோற்றம் என இவர் நடிக்காத கேரக்டர்ஸே இல்லை. ரவிக்குமாருக்கு எப்போதுமே நடிப்பின் மீதான ஆர்வம் அதிகம் என்பது அவர் இயக்கும் படங்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள முடியும்! தான் இயக்கும் படங்களிலின் இடையிலோ அல்லது கிளைமேக்ஸிலோ தனக்காகவும் ஒரு சின்ன ரோலை உருவாக்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார்.
தயாரிப்பாளராக!
மருதநாயகம் திரைப்படம் கிடப்பில் போடப்பட காலகட்டத்தில் , ஒரு வருட கேப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் தெனாலி. இந்த படம் 2000 ஆண்டு வெளியானது. படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். அதே போல தயாரித்தும் இருந்தார். அவரது தயாரிப்பில் வெளியான ஒரே திரைப்படம் தெனாலி என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளராக !
தொழில்நுட்ப யுக்தியுடன் , அவதார் பட பாணியில் உருவான திரைப்படம்தான் ‘கோச்சடையான்’ . இதனை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.இந்த படத்திற்கான கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது நினைவுக்கூரத்தக்கது.