வெயில் படத்தின் அந்த ஒரு காட்சி...பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் வசந்தபாலன்
வெயில் படத்தின் ஒரு காட்சியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவரை வில்லனாக காட்டியதற்கு இயக்குநர் வசந்தபாலன் வானம் திரைப்பட விழாவில் மன்னிப்புக் கேட்டார்

இந்த விழாவிற்கு வரும் போதே ரொம்பவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. ஒரு பழைய கதை தான். அது எனக்கு நடந்த கதை. என்னுடைய முதல் படம் சரியாக போகவில்லை. நான் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். கமர்சியல் உலகத்தில் பெரிய இயக்குநர் அவர். என்னை சுற்றி இருந்த உலகம் எல்லாம் கமர்சியல் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தது. தில் தூல் மாதிரியான படங்கள் பெரிய ஹிட் அடித்தது. என்னுடைய முதல் படம் கதை ரீதியாக முக்கியமானது என்றாலும் அது பெரிய வெற்றிபெறவில்லை. நான் ரொம்ப சோர்ந்து போய் அமர்ந்திருந்தேன். திருமணம் ஆகவில்லை , வயது 31 ஆகியிருந்தது. அப்போது சென்னையில் ஒரு திரைப்பட விழா நடந்தது. அங்கு ஒரு நாளைக்கு திரையிடப்பட்ட 6 படங்களையும் பார்ப்பேன். பார்த்து வீட்டிற்கு வந்து பேப்பரில் அந்த படங்களின் கதைகளை எழுதுவேன். அதை எல்லாம் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. எதற்காக நான் சினிமாவிற்கு வர நினைத்தேனோ அந்த ஆசையை விட்டுவிடக் கூடாது என்கிற நோக்கம் எனகிற நோக்கம் எனக்குள் உருவானது. அப்போது நான் எழுதுன கதைதான் வெயில் .
முதல் படம் தோல்வியான எந்த இயக்குநருக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. அப்படியான நேரத்தில் தான் காதல் படம் வெளியானது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெயில் படத்தின் கதையை சங்கர் சாருக்கு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதை ஷங்கர் சாருக்கு பிடித்தால் ஓக்கே இல்லை என்றால் திரும்பி ஊருக்கு போய் விடலாம் என்று முடிவு செய்தேன். ஷங்கர் சாருக்கு கதை பிடித்திருந்தது. வித்தியாசமான கதைகளை தயாரிக்க வேண்டும் என்று அவர் ஆசைபட்டார். தமிழில் இருந்து கான் திரைப்பட விழாவுக்கு தேர்வான முதல் படம் வெயில். திரைப்பட விழாக்கள் தான் என்னை உருவாக்கியது.
பா ரஞ்சித்தின் வருகைக்குப் பின் தமிழ் சினிமாவில் நிறைய புதிய உரையாடகள் துவங்கியிருக்கின்றன. வெயில் படத்தில் ஒரு பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். நாம் காட்டும் கதாபாத்திரம் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்துவிடக் கூடாது என்கிற கூடுதல் கவனம் ரஞ்சித்தின் வருகைக்குப் பின் உருவாகியிருக்கிறது " என வசந்தபாலன் பேசினார்






















