Director Suraj: சூப்பர் கதையில் நடிக்க யோசித்த விஜய், அஜித் .. ஹிட் கொடுத்த அர்ஜூன் - என்ன படம் தெரியுமா?
விஜய்க்கு தான் அந்த படத்தின் கதையை சொன்னேன். முழு கதையையும் கேட்டவர், ‘நீங்க இந்த படம் பண்ணுங்கன்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டார்’ என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்.
இயக்குநர் சுராஜ் தன்னுடைய மருதமலை படம் உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்துகள் பற்றி காணலாம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜூன், நிலா, வடிவேலு, நாசர், ரகுவரன், லால் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “மருதமலை”. டி.இமான் இசையமைத்த இப்படம் சூப்பர்ஹிட் ஆனது. மருதமலை படத்தின் காமெடி காட்சிகள் எவர்கிரீன் லிஸ்டில் இடம் பிடித்தது. இந்த படம் உருவான விதம் பற்றி இயக்குநர் சுராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, “விஜய்க்கு தான் மருதமலை படத்தின் கதையை சொன்னேன். முழு கதையையும் கேட்டவர், ‘நீங்க இந்த படம் பண்ணுங்கன்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டார். சொந்தமாக தயாரிக்க நினைத்தார். கதை கேட்டு ரொம்ப என்ஜாய் பண்ணார். விஜய் அதுவரை போலீசாக நடித்ததில்லை என்பதால் அவர் கதையை கேட்டவுடன் முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி ஆக்ஷன் என நல்லாருக்கு. நீங்க அப்பாவிடம் பேசி அட்வான்ஸ் வாங்கிக்கோங்கன்னு சொன்னார். ஆனால் அப்போது நான் தலைநகரம் படம் பண்ணவில்லை. கிரி படம் முடிந்ததும் நான் மருதமலை படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி விட்டேன்.
நான் வெயிட்டிங்கில் இருக்கும்போது தயாரிப்பாளர் தாணு சாருக்கு சச்சின் என ஒரு படம் விஜய் பண்ணினார். நான் ஒரு காதல் கதையிலான படம் பண்ணப் போறேன். இதை முடிச்சிட்டு உங்களை நான் கூப்பிடுறேன் என சொன்னார். நானும் சரி, ஒன்றும் பிரச்சினையில்லை என சொல்லிவிட்டேன். இதனையடுத்து தலைநகரம் படம் வெளியாகி ஹிட்டடித்தது. அந்த படம் ரிலீசாகி 2,3 நாட்களில் மோகன் நடராஜ் சாரிடம் இருந்து போன் வந்தது. இந்த மாதிரி அஜித்துக்கு சொல்ல கதை இருக்கா என கேட்டார். என்னிடம் தான் ஏற்கனவே மருதமலை படம் கதை இருக்கே என நினைத்து அவரிடம் கதை சொன்னேன். முழு கதையையும் கேட்ட அவர், சற்று யோசித்தார்.
காரணம், அப்போது தான் அஜித் போலீசாக நடிக்கும் கிரீடம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருந்தது. மீண்டும் போலீஸ் கேரக்டரா? என யோசித்தார். அதன்பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரன் கதை கேட்டார். அவரே யார் இருந்தால் உங்களுக்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? என கேட்க, நான் அர்ஜூன் என சொன்னேன். அவர் கதையை கேட்டு ஜாலியாக ஒரு படம் பண்ணலாம். மருதமலை படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது” என இயக்குநர் சுராஜ் தெரிவித்திருப்பார்.
இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுராஜ் தமிழில் மூவேந்தர், குங்குமப் பொட்டு கவுண்டர், மிலிட்டரி, தலைநகரம், படிக்காதவன், மாப்பிள்ளை, கத்தி சண்ட, சகலகலா வல்லவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.