Thalaivar 173: ரஜினி படத்தை இயக்கப் போவதில்லை.. இயக்குநர் சுந்தர்.சி அறிவிப்பால் அதிர்ச்சி!
Sundar C Steps out From Thalaivar 173: முன்னதாக ரஜினி நடித்திருந்த அருணாச்சலம் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த கூட்டணி 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

கமல் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினியின் 173வது படத்தில் இருந்து விலகுகிறேன். பெருமைமிகு இப்படைப்பில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், #Thalaivar173 என்ற மதிப்புமிக்க திட்டத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படம் உண்மையில் எனக்கு ஒரு கனவு திட்டமாகும். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
SundarC out of #Thalaivar173😲
— AmuthaBharathi (@CinemaWithAB) November 13, 2025
Let's see who gonna replace him🤞 pic.twitter.com/TUFc1DA40h
கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் என்றென்றும் நினைவுக்கூரப்படும். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் எனக்கு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் வாழ்க்கையில் நான் முன்னேறும்போது அவர்களின் உத்வேகத்தையும் ஞானத்தையும் தொடர்ந்து தேடுவேன்.
இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகிச் சென்றாலும், அவர்களின் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து பெறுவேன். இந்த மகத்தான படைப்பிற்காக என்னைக் கருத்தில் கொண்டதற்காக அவர்கள் இருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.
இந்தச் செய்தி எங்களது கூட்டணியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தால், அவர்களிடம் எனது மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம் உங்கள் உற்சாகப்படுத்தும் பொழுதுபோக்கு படங்களைத் தொடர்ந்து வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்” என அந்த அறிக்கையில் சுந்தர்.சி கூறியுள்ளார். சுந்தர் சி ரஜினியை வைத்து அருணாச்சலமும், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படம் எடுத்த நிலையில் இந்த கூட்டணி இணைவதாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பிரிந்தது சினிமா ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.
படத்தை இயக்கப்போவது யார்?
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக நுழையும் ஒவ்வொருவருக்கும் நடிகர் ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ரஜினியும் மூத்த இயக்குநர்களை தவிர்த்து சமீபகாலமாக இளம் இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார். அதன்படி கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு போன்றவர்களில் யாராவது ரஜினி படத்தை இயக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் ரஜினி, கமல் உள்ளிட்டோரை வைத்து சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்கலாம் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் விரைவில் இப்படத்தின் இயக்குநர் அறிவிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.





















