எனக்கும், விஜய்க்கும்தான் பிரச்சனை, ஷோபாவுக்கும் விஜய்க்கும் அல்ல - எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்!
நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரை வீட்டு வாசலில் காரில் காத்துக்கொண்டிருக்க வைத்ததாக வெளியாகிய தகவல்கள் தவறானவை என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரைத் தனது வீட்டு வாசலில் காரில் காத்துக்கொண்டிருக்க வைத்து, வீட்டிற்குள் வரவழைக்காமல் அனுப்பினார் என்று வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் என்ற நடிகர் விஜய் ரசிகர்களின் மன்றமாக செயல்பட்டு வரும் அமைப்பை யார் நிர்வகிப்பது என்ற மோதம் கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய், அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இடையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மோதலில், விஜயின் தாய் ஷோபா தனது மகன் விஜய் பக்கம் நிற்பதாகவும் கூறப்பட்டிருந்தது. விஜய் தனது பெயரிலான மக்கள் இயக்கத்தைத் தனது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதற்கும், பிற பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்துவதில் இருந்து தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
நடிகர் விஜய் தொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கடந்த பிப்ரவரி மாதம், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, ஜெகதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்து நடத்திய கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கத்தைக் கலைப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே செயல்பாட்டில் இல்லை எனவும் எஸ்.ஏ.சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் மனுவுக்கு விளக்கம் தருவதற்காக நடிகர் விஜய் தரப்பிற்கு வரும் அக்டோபர் 29 வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் நடிகர் விஜயைச் சந்திக்க சென்றதாகவும், நடிகர் விஜய் இருவரையும் சந்திக்க மறுத்து வீட்டின் வெளியே காரில் காக்க வைத்ததாகவும், அதன்பிறகு அவர் தனது தாய் ஷோபாவை மட்டும் சந்திக்க ஒப்புக் கொண்டதாகவும், இதனால் கோபித்துக் கொண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் விஜய் வீட்டில் இருந்து அவரைச் சந்திக்காமல் கிளம்பியதாகவும் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை மறுத்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
`நான் வெளிப்படையான மனிதன் என்பதால் என்னுடைய பணிகளைப் பற்றியும், பிற கருத்துகளையும் நான் வெளிப்படையாகப் பேசினேன். அவை அந்த வார இதழில் வெளியாகியுள்ளன. எனினும் குடும்பம் குறித்து நான் பேசுகையில், நான் சொல்லாத, தவறான தகவல் ஒன்று அதில் வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல என்று தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கும் விஜய்க்கும் இன்று பிரச்னை இருப்பது உண்மை. மற்றபடி, விஜய்க்கும், அவரது தாய்க்கும் இடையிலான உறவில் எந்த மனக்கசப்பும் இல்லை; இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால் இந்த செய்தி தவறானது’ என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் தெரிவித்துள்ளார்.