“அம்பேத்காரோட மட்டுமல்ல; தேவருடனும் மோடியை ஒப்பிட்டிருக்க வேண்டும்” - இயக்குநர் பேரரசு
பலர் இளையராஜாவின் சொந்த கருத்தை விமர்சிக்க ஒருவருக்கும் உரிமையில்லை. இது கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதிய முன்னுரை வரிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். பலர் இளையராஜாவின் சொந்த கருத்தை விமர்சிக்க ஒருவருக்கும் உரிமையில்லை. இது கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் இயக்குனர் பேரரசு, ”இன்னொருத்தரோட ஒப்பிட்டிருக்க வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என தெரிவித்திருக்கிறார். மோடி அவர்களுக்கு தேசியமும் இருக்கும் ஆன்மீகமும் இருக்கு. உண்மையில் ஒப்பிடுவதாக இருந்தால், மோடியை பசும்பொன் முத்துராமலிங்க தேவருடன் ஒப்பிட்டிருக்க வேண்டும்” என பேசி இருக்கிறார்.
திரைப்பட இயக்குனரான தங்கர்பச்சான் இது குறித்து பேசும்போது, ”வேறதுவுமே இல்லையா? இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும், போராடவும், வாதங்கள் புரிவதற்கும் வேறெதுவுமே இங்கே இல்லையா?மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் பிழைப்புவாதிகளும், ஊடக பிழைப்புவாதிகளும் இதே போன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலவும், குடிநீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, எரி பொருள் விலை உயர்வு, தொடர் மின் வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதே போல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முன்னதாக, இதுகுறித்து பேசிய இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், "அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் கட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்று தெரிவித்தார்.
பிற முக்கியச் செய்திகள்:
MIvCSK, IPL 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? சாம்பியன்கள் மோதும் லீக் போட்டி!https://t.co/95guNmQxXi#MI #CSK #IPL
— ABP Nadu (@abpnadu) April 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்