உங்களுக்காக உயிரை கொடுக்கனுமா? அருவருப்பான செயல்...வெளுத்து வாங்கிய மாரி செல்வராஜ்
ஒரு நடிகன் தனக்காக உயிரைக் கொடுக்கும் ரசிகர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு அருவருப்பான செயல் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகப் பெருமளவில் பாராட்டுகளை பெற்றதோடு, வசூல் விகிதத்திலும் சிறப்பாக சாதித்து வருகிறது. படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பைசன் படக்குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்களை சந்தித்து உரையாடி வருகிறார். பேட்டி ஒன்றில் இயக்குநரான மாரி செல்வராஜ் நடிகராக வாய்ப்பிருக்கா என்கிற கேள்விக்கு மாரி செல்வராஜ் கொடுத்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது
நடிக்க வருவது குறித்து மாரி செல்வராஜ்
பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் மூலம் அறிமுகமான மாரி செல்வராஜ், சாதி பாகுபாட்டை மையமாகக் கொண்ட தனது கதைகளால் தமிழ் சினிமாவில் புதிய அலையொன்றை எழுப்பினார். தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, இப்போது பைசன் என ஐந்தாவது முறையாக வெற்றி குவித்துள்ளார்.
நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிய கபடி தங்கப்பதக்கம் வென்ற வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, தென் மாவட்டங்களில் நிலவும் சாதி வன்முறைகளையும், அதைக் கடந்து ஒரு இளைஞன் எவ்வாறு கபடியில் சாதனை படைக்கிறார் என்பதையும் உணர்ச்சிவயப்பட்ட காட்சிகளின் வழி மாரி செல்வராஜ் நயமாக சொல்லியுள்ளார். சிறப்பான திரைக்கதை, சக்திவாய்ந்த நடிப்பு, அழுத்தமான இசை ஆகியவை பைசன் படத்தை ரசிகர்கள் மத்தியில் கடந்த 10 நாட்களாக பாராட்டுகளின் மழையில் நனைக்கின்றன. பைசன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ 45 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்காலத்தில் மாரி செல்வராஜ் நடிக்க வருவதற்கு வாய்ப்பிருக்கா என கேட்டு வருகிறார்கள். இதற்கு மாரி செல்வராஜ் கொடுத்துள்ள பதில் மிக சுவாரஸ்யமானது
நான் கடவுளாக விரும்பவில்லை
" நான் நடிக்க மாட்டேன். நீங்க நடிகனா இருக்கீங்க என்றால் என்ன ஏது என்று கேட்காமல் உங்கள் பின்னாடி அலைவதற்கு ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் . அது அவசியமில்லாததாகவும் அருவருப்பான காரியமாக பார்க்கிறேன். நடிகன் என்பதற்காகவே உங்களுக்காக உயிரைக் கொடுக்க ஆட்கள் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. அதனாலேயே நடிப்பின்மீது எனக்கு ஒரு பெரிய ஒவ்வாமை உள்ளது. ஒரு நடிகன் என்றால் அதற்கு ஒரு மோகம் கிடைக்கிறது. உங்களை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள். நான் கடவுளாக விரும்பவில்லை ஏனால் எனக்கு கடவுள் மீது நம்பிக்கையும் கிடையாது " என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்
மாரி செல்வராஜின் கருத்து விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகச்ச்சரியாக பொருந்துவதாக ரசிகர்கள் சுட்டிகாட்டி வருகிறார்கள்






















