Mani Ratnam: PS1 -ல் ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? - ஓபனாக பேசிய மணிரத்னம்!
பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்காதது ஏன் என இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை நடிக்க வைக்காதது ஏன் என இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் பத்த்ரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இந்த சந்திப்பில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மணிரத்னம், “ எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன். சண்டைக்கு செல்லும்போது ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள் தான் இருக்கும். அதன்படி தான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன்.
இப்படத்திற்கு முதலில் வசனங்களை தூய தமிழில் தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேசமுடியவில்லை, உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில் தான் எழுதிக் கொடுத்தார்.
தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி' என்ற பாடலை இப்படத்திற்கு ஒரு டிரைலராக வைத்துக் கொள்ளலாம். பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியின் வேடத்தை தான் அந்த பாடலில் பயன்படுத்தி இருப்பேன். அதை தவிர என்னுடைய முந்தைய படங்களில் வேறு எதையும் நான் எடுக்கவில்லை.
மாற்றங்கள் என ஏதும் இல்லை, முழு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது. ஒரே படத்தில் கதை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் 2 பாகங்கள் எடுக்கலாம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க அது வசதியாக அமைந்தது. இத்தனை வருடங்கள் எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது. இப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது ஒவ்வொருவரையும் இந்த பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்து தான் முடிவு செய்தேன். அது சரியாகவும் வந்திருக்கிறது.
கல்கியின் இந்த கதைக்கு , ஜெயம் மோகன், குமரவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. பின் தயாரிப்புப் பணிகள் தான் மீதம் இருக்கிறது. பல காட்சிகளை புத்தகத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த முடியாது. அதை புரிய வைக்கவும் முடியாது.
ஆகையால், சினிமாவிற்கு ஏற்றபடி காட்சிகளை சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அமைத்திருக்கிறேன். மணிரத்னம் இப்படித்தான் படம் எடுப்பார் என்று என்னை பற்றி கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன். ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி இரு ரசிகர்களிடமும் மாட்டி கொள்ள நேரிடும். ஆகையால் அவரை வேண்டாம் என்று கூறி விட்டேன்.
கொரோனா காலத்தில் நான் பயந்த ஒரே விஷயம் நடிகர் நடிகைகள் குண்டாகி விடுவார்களோ என்பதை பற்றி தான். உடற்பயிற்சி நிலையங்கள் இல்லை. அனால் அதற்கு அவரவர்கள் கடுமையாக உழைத்தார்கள்” என பேசியுள்ளார்.