Lokesh Kanagaraj Vs Manikandan : சும்மா இருந்த லோகேஷை தூண்டிய மணிகண்டன்... கமலின் தீவிர ரசிகன் யார்? கடுமையான விவாதம்... ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
'நான் தான் கமல் சார் தீவிரமான ரசிகன்' விட்டுக்கொடுக்காமல் மாறி மாறி வாக்குவாதம் செய்த லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் மணிகண்டன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் என்ற பட்டியலில் வெகு சில ஆண்டுகளிலேயே கைப்பற்றியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது 'லியோ - ப்ளடி ஸ்வீட்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் வசூலை ஈட்டி ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றது விக்ரம் திரைப்படம். கமல்ஹாசனுக்கு சிறந்த கம் பேக் படமாக விக்ரம் திரைப்படம் அமைந்தது. அந்த வகையில் தான் நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகன் என்பதை பல மேடைகளில் வெளிப்படுத்தியவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த ஸ்டேட்மென்ட்டால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகருடன் சண்டையிடவும் தயாராகிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
வாக்குவாதம் செய்த மணிகண்டன் :
காலா, விக்ரம் வேதா, ஜெய்பீம் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். நடிப்பதைக் காட்டிலும் இயக்கத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் கவனம் செலுத்தி வரும் மணிகண்டன் ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் குவித்தார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருது ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் சூர்யா அந்த விருதினை ராஜக்கண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு அளித்தார். அப்போது பேசிய மணிகண்டன் நான் கமல் சாரின் தீவிரமான ரசிகன் என்றார். அதோடு முடித்து கொள்ளாமல் லோகேஷ் பல இடங்களில் அவர் தான் கமல் சாரின் ரசிகன் என கூறும் போது அவரை அடித்து விடலாம் போல இருக்கும். அந்த பட்டம் என்னுடையது எந்த சமயத்திலும் அதை நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என பல பேர் முன்னிலையில் உளறி கொட்டினார்.
கடுப்பான லோகேஷ் :
அடுத்தாக மேடையில் விருது பெற வந்த லோகேஷ் கனகராஜ் பேசுகையில் 'ஒரு மணிகண்டன் இல்லை 100 மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழித்து கொண்டு சண்டைக்கு போவேன். நான் தான் கமல் சாரின் தீவிரமான ரசிகன் என்ற இடத்தை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்' என்றார்.
இப்படி லோகேஷும், மணிகண்டனும் ஒருவரையொருவர் கமலின் ரசிகன் என்ற பட்டத்தை பெற போட்டியிடுவதை பார்த்த நெட்டிசன்கள் வாங்க வாங்க சீக்கிரம் அடிச்சுக்கோங்க என ட்ரோல் செய்து வருகிறார்கள். அவர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.