இளையராஜா, தேவா போல இசையமைக்க முடியவில்லை.. புதிய இசையமைப்பாளர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி ராஜா
புதிய இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா போல இசையமைக்க முடியவில்லை; இசையில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் பழைய பாடல்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் புதிய சினிமா படப்பிடிப்பு நடத்த இடம் தேர்வு செய்வதற்காக பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா சேலத்திற்கு வருகை தந்தார். இந்த புதிய திரைப்படத்தை மல்லூரைச் சேர்ந்த வேங்கை அய்யனார் என்பவர் தயாரிக்கிறார். இந்த படத்தை கஸ்தூரிராஜா இயக்க உள்ளார். இதன் காரணமாக கஸ்தூரிராஜா சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கதை விவாதத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கஸ்தூரிராஜா, புதிய திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி வருகிறேன் "சாமக்கொடாங்கி" என்ற கிராமத்து கதை எடுக்க இருக்கிறோம். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இடம் தேர்வு செய்ய சேலம் வந்துள்ளதாக கூறினார். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் படபிடிப்பை நடத்தி முடித்து விடுவோம் என்றார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகன் யார்? என கேட்டதற்கு, கதை தான் கதாநாயகன் என்றார். மேலும் பஞ்சுமிட்டாய், ஒத்த ரூபா தரேன் உள்ளிட்ட மூன்று பாடல்கள் பிரச்சனையில் உள்ளது. புதிய இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா போல இசையமைக்க முடியவில்லை. இசையில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் பழைய பாடல்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். பாடலை பயன்படுத்தும் போது அனுமதி கேட்டு பயன்படுத்தலாம். ஆனால் யாரும் கேட்பதில்லை என குற்றம்சாட்டினர். விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

முன்புபோல் முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இப்போது வருவதில்லை. தற்போது வெளியாகும் படங்களில் எலக்ட்ரானிக் இசை தான் வருகிறது. மீண்டும் மீண்டும் இளையராஜா, தேவா போன்றோரின் பெயர்களை தான் கூற வேண்டி இருக்கிறது என்றார். மேலும் மாமன், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்கள் நன்றாக ஓடுகிறது. தமிழ் திரையுலகில் கதைக்கு பஞ்சம் ஒன்றுமில்லை. மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. மாமன், மச்சான், அண்ணன், தங்கை இந்த குடும்ப கலாச்சாரம் மண்ணை விட்டு போகாது, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை இயக்கிய பையன் நன்றாக இயக்கியிருக்கிறார். இப்போது இருக்கும் இயக்குனர்கள் அந்த படத்தில் கொஞ்சம், இந்த படத்தின் கொஞ்சம் எடுத்து போட்டு படம் எடுக்கிறார்கள். பின்னர் எப்படி திரைப்படம் ஓடும். சினிமா இப்போது சரியான நிலையில் இல்லாததற்கு காரணம் சரியான திட்டமிடல், தேடுதல் இல்லை. சினிமா அருமையான தொழில் திட்டமிட்டு செய்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தால் அடுத்த படம் எடுப்பார்கள். இதையெல்லாம் இயக்குனர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் கருத்துச் சொல்ல சுதந்திரம் இருக்கிறது. அதனை எண்ணி சரியாக கருத்து சொல்ல வேண்டும் என்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து கேட்டதற்கு, அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர் அவர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பது பெருமை அளிக்கிறது" என்று கூறினார்.





















