Jayalalitha: படையப்பா படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா கேரக்டர்களா? - நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த கே.எஸ்.ரவிகுமார்
கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான முத்து திரைப்படம் வெளியாகி 28 வருடங்கள் நிறைவடைய இருக்கின்றன
முத்து ரீ-ரிலீஸ்
கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான முத்து திரைப்படம் வெளியாகி 28 வருடங்கள் நிறைவடைய இருக்கின்றன. மேலும் தமிழில் வெளியாகிய மூன்று வருடங்கள் கழித்து இந்தப் படம் ஜப்பானில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை கடந்த 20 ஆண்டுகளாக தக்கவைத்திருக்கிறது முத்து படம்.
கடந்த ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் வருகை இந்த சாதனையை முறியடித்தது. ஜப்பானில் முத்து படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனைக் கொண்டாடும் வகையில் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி முத்து திரைப்படம் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குநர் கே எஸ் ரவிகுமார். அப்போது முத்து மற்றும் தன்னுடைய பிற படங்கள் தொடர்பான கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கொடுத்துள்ளார்.
நீலாம்பரி
கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இன்னொரு படம் படையப்பா. இந்தப் படத்தில் வில்லனாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றுவரை அசைக்க முடியாத ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து வைத்துள்ளது. நீலாம்பரி கதாபாத்திரத்தை பலர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதாவுடன் தொடர்புப்படுத்தி பேசிக் கொண்டார்கள். ஆனால் இன்று வரை அது தொடர்பான எந்த விளக்கமும் இயக்குநர் ரவிக்குமார் அளிக்கவில்லை.
தற்போது அவர் நீலாம்பரி கதாபாத்திரத்தைத்தான் எழுதும்போதே ஜெயலலிதா அவர்களை மனதில் வைத்து தான் எழுதியதாகவும் அப்படியான ஒரு கம்பீரமான பெண்ணுக்கு எப்படியான உடல்மொழி இருக்க வேண்டும் என்பதை தான் யோசித்து தான் எழுதியதாக அவர் கூறியுள்ளார். மேலும் பிற நாடுகளிலும் ஜெயலலிதாவை தெரியாவிட்டாலும் இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஒரு படம் வெற்றிபெறுவதற்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் இது எல்லாம் போனஸ் தான் என்று அவர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு அதே நிலைமைதான்
அதே போல் படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓஹோஹோ கிக்கு ஏறுதே பாடலில் ’தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள‘ என்கிற வரி எம்ஜிஆரை குறிப்பிட்டு எழுதியதா என்கிற பத்திகையாளர்களின் கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார் ரவிக்குமார். “எம்ஜிஆரை குறிவைத்து அந்த வரிகள் எழுதப்படவில்லை. எம்ஜிஆராகவே இருந்தாலும் கடைசியில் மண்ணுக்குள்ளதான் போகனும் அது தான் இயற்கை என்பதை உணர்த்த அந்த வரிகள் எழுதப்பட்டது என்று அவரை குறை சொல்ல இல்லை. அவருக்கு அந்த நிலைமை என்றால் நமக்கு எல்லாம் என்ன நிலைமை என்பதுதான் அந்த வரிகள்” என்று ரவிக்குமார் குறிப்பிட்டார்.