விஜய்க்கு முதல் குரல் கொடுத்த இயக்குநர்.. அடுத்த பிரம்மாண்டம் விரைவில்.. அவரே சொல்லிட்டாரு
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபல இயக்குநர் நெத்தியடி பதில் அளித்திருக்கிறார்.

பிரசாந்த் நடித்த தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஹரி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக கோவில், தாமிரபரணி, சாமி, ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். ஹரி படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஹரி படங்கள் என்றாலே விறுவிறுப்பான ஆக்சன் காட்சியும், குடும்பங்களை கண்ணீர் கசிய விடும் சென்டிமென்டும் அதிகமாகவே இருக்கும்.
கறி விருந்தில் காரம் குறையாத அளவிற்கு அவரது படங்களும் இருக்கும். கமர்ஷியல் படத்திற்கான அனைத்தும் ரசனைகளையும் ரசிகர்களுக்கு ஊட்டி வளர்த்தவர் ஹரி. குறைந்த பட்ஜெட்டில் பீல் குட் படங்களை கொடுத்து நடிகர்களின் மார்க்கெட்டும் குறையாத அளவிற்கு பார்த்துக்கொண்டார். ஆனால், சமீபகாலமாக இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பழைய மசாலா படங்கள் போன்று இருப்பதாகவே விமர்சிக்கப்படுகிறது. ஒரு ஹிட் கொடுக்க தடுமாறி வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஹரி - பிரசாந்த் கூட்டணியில் புதிய படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு பிரம்மாண்டமாக பிரசாந்த் பிறந்தநாளையொட்டி வெளியானது.
இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு வருகை தந்த இயக்குநர் ஹரி அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் அவருடன் சென்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹரி, ராமேஸ்வரம் எனக்கு ரொம்ப பிடித்த இடம். அடிக்கடி வருவேன். அடுத்து இயக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்தார். விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அரசியலுக்கு யார் வந்தாலும் நல்லது தான் என பதில் அளித்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.





















