விரட்டி விட்ட கே.பாலசந்தர்.. அவருக்கே படம் பண்ணி வெற்றி பெற்ற இயக்குநர்!
முதலில் என்னோட அப்பாயின்மென்ட் நீங்க வாங்குனீங்களா? என கேட்க, எனக்கு கை, கால் எல்லாம் நடுங்கி விட்டது. என்னோட அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்க வந்தது மிகப்பெரிய தவறு என கூறி வெளியே போக சொன்னார்.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் நடிக்க சான்ஸ் கேட்டு போனபோது அவர் மறுத்த கதையை இயக்குநர் பாரதி கண்ணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம்.
நடிக்க சான்ஸ் கேட்ட இயக்குநர்
கே.பாலசந்தரை சந்தித்த அனுபவம் ஒன்று இருக்கிறது. அவரிடம் நான் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு சென்றேன். எனக்கு அப்போது நடிப்பதற்கு ஆசை இருந்தது. நேராக அவரின் வீட்டிற்கு சென்று விட்டேன். அந்த நேரம் அவர் மாடிப்படிக்கு ஏறிட்டு இருந்தார். வணக்கம் சார் என கூறினேன். டக்கென திரும்பி பார்த்தவர் யார் நீங்க என கேட்டார். நான் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன் என சொன்னேன்.
முதலில் என்னோட அப்பாயின்மென்ட் நீங்க வாங்குனீங்களா? என கேட்க, எனக்கு கை, கால் எல்லாம் நடுங்கி விட்டது. என்னோட அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்க வந்தது மிகப்பெரிய தவறு. அதனால் நடிக்க வாய்ப்பு எல்லாம் கிடையாது என கூறி விட்டார். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் நான் கே.பாலச்சந்தருக்கே படம் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று அப்பாயின்மென்ட் இல்லை என கூறி என்னை வெளியே போக சொன்ன அவர், அதே இடத்தில் அப்பாயின்மென்ட் கொடுத்து வர சொல்லுங்க என கூறினார்.
15 நிமிடம் டைம் கொடுத்த கே.பி
நான் கண்ணாத்தாள் படம் பண்ணி முடிச்சிருந்தேன். அப்போது கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ராம.நாராயணனை வைத்து ராஜகாளியம்மன் படத்தை எடுத்திருந்தார்கள். அதனால் அடுத்ததாக மீண்டும் சாமி படம் எடுக்க முடிவு செய்து என்னை அழைத்தார்கள். எனக்கு புஷ்பா கந்தசாமி போன் செய்து பேசினார். நான் அவரிடன் உங்ககிட்ட கதை சொல்ல வேண்டுமா? என கேட்டேன். அதற்கு அவர் அப்பாவிடம் சொல்ல வேண்டும் என கூறினார்.
அவர் எப்பேர்ப்பட்ட படங்களை இயக்கியவர். அவரிடம் நான் எப்படி சொல்ல முடியும் என கேட்டேன். அதற்கு புஷ்பா, அப்பா ஏ டூ இசட் வரை அனைத்தையும் புரிந்து கொள்வார் என கூறினார். அதன்படி குறிப்பிட்ட நாளில் கே.பாலசந்தர் அலுவலகத்திற்கு சென்றேன். என்னை பார்த்தவர் 15 நிமிடங்கள் தருகிறேன், அதற்குள் சொல்லுங்கள் என கூறி கதை கேட்க அமர்ந்தார். நான் வழக்கம்போல என்னுடைய பாணியில் கதை சொல்ல தொடங்க கிட்டதட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக கதை கேட்டார்.
பரவாயில்லை, சாமி படத்தைக் கூட இவ்வளவு விறுவிறுப்பாக சொல்றீங்களே என பாராட்டினார். உடனே புஷ்பாவிடம், இவர் எனக்கு டபுள் பாசிட்டிவ் காமிச்சிட்டாரு என கூறி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அந்த படம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி” என இயக்குநர் பாரதி கண்ணன் கூறியிருப்பார்.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி படம்
2001 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், ராம்கி, சங்கவி, பானுப்பிரியா, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















