உனக்கு ஏன் இவ்வளவு குரூரம்...? சேது படத்தைப் பார்த்து பாலாவிடம் கத்திய பாலுமகேந்திரா
தனது முதல் படமான சேது திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாலுமகேந்திரா தன்னை அழைத்து கடுமையாக திட்டியதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்
வணங்கான்
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, சாயாதேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், டாக்டர் யோகன் சாக்கோ, கவிதா கோபி, பிருந்தா சாரதி, மை பா நாராயணன், அருள்தாஸ், முனிஷ் சிவகுருநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பாலா இயக்குநராக அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளன. வணங்கான் படத்தின் ரிலீஸை ஒட்டி இயக்குநர் பாலா தனது சினிமா கரியரிலிருந்து பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார்.
சேது படம் பார்த்து பாலுமகேந்திரா கொடுத்த ரியாக்ஷன்
இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பாலா. பாலாவின் முதல் படமான சேது படத்தைப் பார்த்து தனது குரு பாலுமகேந்திரா சொன்னதை பாலா நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். " பாலுமகேந்திரா சேது படம் பார்த்தபோது அங்கு படக்குழுவினர் அனைவரும் இருந்தார்கள். அதனால் சபை நாகரிகத்திற்காக 'நல்லவேளை நான் இறப்பதற்குள் உன் படத்தைப் பார்த்துவிட்டேன்' என்று சொன்னார். அதன்பின் என்னை தனியாக அழைத்து. ' பாலா உனக்கு ஏன் இவ்வளவு குரூரம். ஒரு ஐயர் வீட்டுப் பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி அவள் படிக்கும் ஒரு கல்லூரியில் ஒரு ரவுடிமேல் அவளுக்கு காதல் வரவழைத்து கடைசியில் அவளையும் கொன்று அவனையும் பைத்தியக்காரனாக மாத்திட்ட. உனக்கு ஏன் இவளோ வன்முறை. நீ உருவாக்கிய அந்த பெண் கதாபாத்திரம் உன்னோட பிள்ளை மாதிரி. உன்னோட பிள்ளையை நீயே கழுத்தை நெறித்து ஏன் கொல்லனும். ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்" என்று பாலு மகேந்திரா என்னிடம் ரொம்ப கடுமையாக பேசினார்.
"நான் உங்களை மாதிரி மென்மையானவன் இல்லை. எனக்கு இப்படி தான் தோனுது. உங்களை மாதிரியே எடுக்க வேண்டும் என்றால் நீங்களே போதுமே நான் எதற்கு " என்று நான் அவரிடம் பதில் சொன்னேன்