Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...
Vanangaan Trailer : பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வணங்கான்'. நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலக அவருக்கு பதில் அருண் விஜய்க்கு அந்த வாய்ப்பு வந்தது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார் நடிகர் அருண் விஜய். நிச்சயம் இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பாலாவின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் என்றுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அவரின் திரைக்கதை ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருப்பதே அதற்கு காரணம். அந்த வகையில் 'வணங்கான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு கையில் பெரியார் சிலையும் ஒரு கையில் விநாயகர் சிலையுடனும் கிணற்றில் இருந்து பரட்டை தலையுடன் வந்த அருண் விஜய் மிரட்டான லுக் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரோஷினி பிரகாஷ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஆவலுடன் காத்துகொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தற்போது 'வணங்கான்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் மிரட்டலான பின்னணி இசையும், அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளும் நிறைந்த இந்த டிரைலர் மிரட்டலாக உள்ளது. வெறிகொண்ட சிங்கம் போல அருண் விஜய் அதிரடி ஆக்ஷன் சீக்வன்ஸ் கதிகலங்க வைக்கிறது. அவரின் இந்த அளவுக்கு வெறித்தனத்துடன் கொந்தளிப்பதற்கான காரணம் என்ன? ஒரு பக்கம் பாசமான சிரித்த முகத்துடன் இருக்கும் அருண் விஜய் அடங்காதவனாக பழி தீர்ப்பதன் நோக்கம் என்ன? இது தான் படத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள கதைக்களமாக இருக்கும் என கணிக்கவைக்கிறது.
மற்ற இயக்குநர்களை ஒப்பிட்டு பார்க்கையில் பாலா தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே காட்சி படுத்த வேண்டும் என நினைப்பவர். அவரின் ஆக்ரோஷம் இந்த விறுவிறுப்பான டிரைலரிலேயே வெளிப்படுகிறது. இது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.