கட்டுப்பாடு விதிக்க நீங்க யாரு...? கங்குவா படக்குழுவை விளாசிய அமீர்
படத்தின் ப்ரோமோஷனுக்கு பத்திரிகையாளர்களை அழைத்த கங்குவா படக்குழு ஏன் படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொன்னது என அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்

கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. திரையரங்கில் வெளியான முதல் நாள் முதலே கங்குவா படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகின. திட்டமிட்டு கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்பட்டதாக படக்குழு சார்பாக கூறப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் கங்குவா அடிவாங்கியதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சில திடீர் தீர்மானங்களை நிறைவேற்றியது. அதன்படி இனிமேல் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு திரையரங்கத்திற்கு வெளியே யூடியூம் சேனல்கள் அனுமதிக்கப்பட்ட கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கும் எந்த விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விமர்சனங்களுக்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கருதி நீதிமன்றம் இந்த வழக்கதை தள்ளுபடி செய்தது.
கங்குவா பட சர்ச்சைக் குறித்து இயக்குநர் அமீர் படக்குழுவை குறிப்பிட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கட்டுப்பாடு விதிக்க நீங்க யார் ?
" ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினரோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரோ கங்குவா படத்தை வீழ்த்த நினைத்திருந்தால் பக்கத்து மாநிலத்தில் என்ன நடந்தது என்று நாம் பார்க்க வேண்டும் . தமிழ் தவிர மற்ற மாநிலங்களில் எந்த நடந்தது என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும் . நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் இந்த மாதிரியான ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் கடுமையான உழைப்பு வேண்டும். அந்த நடிகர் கடுமையாக இரண்டு ஆண்டு காலத்தை செலவிட்டிருக்கிறார். இந்த மாதிரியான ஒரு படம் எடுக்கும்போது அது ஒன்று வெற்றிபெறும் அல்லது வீணாகும். இதற்கு சிறந்த உதாரணம் உலக நாயகன் கமல்ஹாசன். குணா ஆளவந்தான் , ஹே ராம் என கடின உழைப்பை போட்டு அவர் படங்கள் நடித்திருக்கிறார். அதனால் பல தோல்விகளை சந்தித்திருக்கிறார். அப்போது அவர் வந்து விமர்சனங்கள் கூடாது என்று அவர் சொல்லவில்லை. அவர் அத கடந்து வந்துவிட்டார். உடனே நீங்கள் தயாரிப்பாளர் எல்லாம் சேர்ந்து விமர்சனங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்று சொல்லக்கூடாது. உங்கள் பொருள் சந்தைக்கு வந்துவிட்டது என்றால் அதில் பார்வையாளரும் பத்திரிகையாளரும் ஒரே தரத்தில் தான் இருக்கிறார்கள். பிறகு ஏன் உங்கள் படத்தின் ப்ரோமோஷனுக்கு பத்திரிகையாளர்களை அழைக்கிறீர்கள்.
அப்படியெல்லாம் கட்டுப்பாடு விதிக்கவும் முடியாது அது சாத்தியமும் படாது. இப்போ நடந்தது என்ன. நீங்க தியேட்டருக்கு வரக்கூடாது என்று சொல்லி விட்டீர்கள் கங்குவா படத்திற்கு பின் வெளியான சில சின்ன படங்கள் வந்ததே தெரியாமல் போய்விட்டன" என அமீர் கங்குவா படக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார்

