Ameer: ”எனக்கு தமிழ் சினிமா நடிகர்கள் மேல் நம்பிக்கையே கிடையாது” .. இயக்குநர் அமீர் பேச்சால் சலசலப்பு..!
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருந்த “சித்தா” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
எனக்கு எப்பவுமே தமிழ் சினிமா நடிகர்கள் மேல் எந்த நம்பிக்கையும் கிடையாது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருந்த “சித்தா” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கான ப்ரோமோஷன் நடைபெற்ற சமயத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அரசுகள் இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. குறிப்பாக கர்நாடகாவில் மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்றது.
இதற்கிடையில் பெங்களூருவில் நடைபெற்ற சித்தா பட ப்ரோமோஷனில் சித்தார்த் பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கினுள் கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் வருகை தந்து பிரச்சினை செய்தனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவராஜ்குமார் உள்ளிட்ட சிலர் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினர். ஆனால் பிரச்சினையில் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்த சித்தார்த், பிரபலங்கள் மன்னிப்பு கேட்டதை தன்னால் ஏற்கவே முடியவில்லை என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த இயக்குநர் அமீரிடம் சித்தார்த் விவகாரம் குறித்தும், அதற்கு குரல் எழுப்பாதது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சித்தார்த்துக்காக யாரும் பேசலைன்னு சொல்ல முடியாது. முதலில் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்தாரு, அப்புறம் சிவராஜ்குமார் உள்ளிட்ட சிலர் பேசுனாங்க. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. நடிகர் விஜய் படம் வரும்போது பிரச்சினை ஏற்படும் போது சித்தார்த் குரல் கொடுத்தாரா என்ற கேள்வி எழலாம்.
ஆனால் நீங்கள் இதை அப்படி பார்க்ககூடாது. பொதுவாக அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கு, மக்கள் என்ன மனநிலையில் இருக்காங்கன்னு தான் பார்க்கணும். தனிப்பட்ட முறையில் இவர் குரல் கொடுத்தாரா, அவர் பேசுனாரா என பார்த்தாலும் என்றைக்கும் யாரும் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்ததே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் ஜல்லிக்கட்டு பிரச்சினை மட்டுமே விதிவிலக்காக இருந்தது.
கர்நாடகா திரையுலக கலைஞர்கள் அந்த மாநில அரசியலோடு பின்னி பிணைந்துள்ளார்கள். தமிழ் சினிமா கலைஞர்கள் அந்த அரசியலோடு பிணையவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டபோது சித்தார்த்த் குரல் கொடுத்தாரா? இல்லை. அதுக்குன்னு அவரை நான் கோபித்துக் கொள்ள முடியுமா?. அவர் எனக்கு நண்பர் தான். அந்தந்த நேரத்தில் உங்களுக்கு விருப்பம், சூழல் இருக்கலாம். அதைத்தான் பார்க்க வேண்டும்.
எனக்கு சித்தார்த் நிகழ்வில் நடந்ததற்கு கோபம் இருக்கு, வருத்தம் இருக்கு. இங்கே கன்னட திரைக்கலைஞர்கள் வரும்போது எதிர்ப்பு தெரிவிக்கலாமா என்று கேட்டால் தெரிவிக்கலாம் தான். ஆனால் அது பண்பாடு இல்லை என்பதால் நாம் அமைதியாக இருக்கிறோம். எனக்கு எப்பவுமே தமிழ் சினிமா நடிகர்கள் மேல் எந்த நம்பிக்கையும் கிடையாது. அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தமும் கிடையாது” என அமீர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Director Ameer: இந்திய ரசிகர்களின் ”ஜெய் ஸ்ரீராம்” கோஷம்.. படித்த சமூகம் மடைமாற்றப்பட்டதாக அமீர் கடும் கண்டனம்..!