CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: 2026ஆம் ஆண்டிற்கான 'கியூட்' நுழைவுத் தேர்வுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்களில் 2026 மே மாதம் நடைபெறும் என்று என்டிஏ உறுதிப்படுத்தியுள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்னணிக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET UG - 2026) குறித்த முக்கிய அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
தேர்வு எப்போது?
2026ஆம் ஆண்டிற்கான 'கியூட்' நுழைவுத் தேர்வுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தேர்வு மையங்களில் 2026 மே மாதம் நடைபெறும் என்று என்டிஏ உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் அடிப்படையில் பதிவு
இந்த ஆண்டு விண்ணப்பச் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த 'ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் 10-ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ள விவரங்களுக்கும், ஆதார் அட்டையில் உள்ள விவரங்களுக்கும் இடையே எந்தவித முரண்பாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன ஆவணங்கள் தேவை?
விண்ணப்பிக்கும் முன் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களைச் சரியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:
- ஆதார் அட்டை: இதில் பெயர், பிறந்த தேதி (10ஆம் வகுப்பு சான்றிதழில் உள்ளது போல), தற்போதைய புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை சரியாகப் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி சான்றிதழ்: மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் முறையாகப் புதுப்பிக்கப்பட்ட UDID அட்டை அல்லது செல்லத்தக்க சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
- இட ஒதுக்கீடு சான்றிதழ்: EWS, SC, ST, OBC- NCL பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், நடப்பு ஆண்டிற்குரிய புதுப்பிக்கப்பட்ட மற்றும் செல்லத்தக்க சாதிச் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதிவாய்ந்த மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- "Candidate Corner" பகுதியில் உள்ள "CUET UG 2026 Registration" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
இந்தத் தேர்வு கணினி வழித் தேர்வாக நடைபெறும். இதன் மூலம் இந்தியாவின் 47 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட பிற கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை NTA ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு மாணவர்கள் அவ்வப்போது cuet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















